வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி..?

ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை
வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி..?

ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகரில் இப்போது அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
1. வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிக அளவில்  தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர்  மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.
2. கோடைக் காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
3. நேரடியாக உச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.  தவிர்க்க இயலாத சமயங்களில் குடை அல்லது தலை மறைக்கும் துணியைப்  பயன்படுத்தலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்கவும்.
4. கடுமையான வெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் உப்பு சர்க்கரைக் கரைசல் கலந்த நீரை பருகவும். கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப் பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
5. வெயிலில் செல்லும்போது தலைசுற்றல் மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில் ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும். அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகே உள்ள அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி  மருத்துவமனையை  அணுகவும். புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழியாக, பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக் கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும். கறுப்புநிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை அதிகமாக உறிஞ்சி சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.
6. கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். அடிக்கடி நல்ல தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும். மேலும், ஒருநாளைக்கு  இரண்டு முறை குளித்தல் நல்லது. இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும் அழுக்குகளும் குறையும்.  வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம். கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால் நல்லது.
7. உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் (Malassezia furfur) எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது அரிப்புடன் கூடிய ‘தேமல்’ (Tinea Versicolar) தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும். கோடைக் காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல் உகந்தது. இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிர்க்கவும்.
8. குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
9. தெருக்களில் விற்றுவரும் ஐஸ் போன்ற உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்கவும்.
10. சின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால், அரசு மற்றும்  சென்னை மாநகராட்சி மருத்துவமனையை அணுகவும். அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்.  நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும் வரையில் தனிமையில் இருக்க வைக்க வேண்டும்.
11. தெருவோரங்களில் ஈ மற்றும் தூசிபடிந்த நிலையிலும், தோலுரித்த, வெட்டி விற்பனை செய்யப்படும் பழங்கள்  மற்றும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம். தெருக்களில் விற்று வரும் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் போன்ற பொருட்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
12. அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.

அவசர உதவி  மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள்.  044-2591268687 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com