அமைச்சர், சரத்குமாரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (ஏப்.10) சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அமைச்சர், சரத்குமாரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (ஏப்.10) சுமார் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை உரிய ஆவணங்களுடன் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரது வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
அமைச்சரிடம் விசாரணை: இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு வருமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
தனித்தனியே விசாரணை: இதையடுத்து விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.
இதில் விஜயபாஸ்கர், அமைச்சருக்குரிய சுழல் விளக்கு இல்லாத காரில் அங்கு காலை 11.15 மணியளவில் வந்தார். சரத்குமார் காலை 11.30 மணிக்கும், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் 11 மணிக்கும் வந்தனர்.
மூவரிடமும் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த கேள்விகளை கொண்டு அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்வாறு மொத்தம் 35 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகள், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி குறித்தும், ரூ. 89 கோடி ஆவணம் குறித்தும் இருந்ததாகத் தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு சில பணபரிமாற்றத்துக்கு தன்னிடம் சட்டபூர்வமான ஆதாரங்களும், ஆவணங்களும் இருப்பதாக விஜயபாஸ்கர் கூறினாராம். விஜயபாஸ்கர் அளித்த பதில்களில் இருந்தும் அதிகாரிகள் மேலும் கேள்விகளை கேட்டனர். ஆனால் விஜயபாஸ்கரின் பதில்களில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் சுமார் நான்கரை மணி நேர விசாரணைக்கு பின்னர், விஜயபாஸ்கரை அதிகாரிகள் விடுவித்தனர்.
மீண்டும் ஆஜராக... மேலும் ஒரு வாரத்துக்குள் நடைபெறும் அடுத்தகட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். அப்போது பணத்துக்குரிய ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும் எனவும் விஜயபாஸ்கரிடம் அவர்கள் அறிவுறுத்தினர். அடுத்ததாக சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரையும் வரும் 13 -ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகும்படி வருமான வரித் துறையினர் உத்தரவிட்டுள்ளனராம்.
8 மணி நேரம் விசாரணை: நடிகர் சரத்குமாரிடம் வருமான வரித் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்தனர். இந்த விசாரணை மாலை 6 மணியைத் தாண்டியும் நீடித்தது. இந்நிலையில் இரவு 7.27 மணியளவில் விசாரணை முடிந்து சுமார் 8 மணி நேரத்துக்கு பின்னர் சரத்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். வருமான வரித் துறையின் இந்த விசாரணையையொட்டி, அந்த அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

"அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்'

வருமான வரித் துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
வருமான வரித் துறையின் நான்கரை மணிநேர விசாரணை முடிந்த பின்னர் விஜயபாஸ்கர் வெளியே வந்தார். அலுவலக வாயிலில் காரில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு கூறியபோது, "வருமான வரித் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்' என்றார்.
இதேபோல் 8 மணி நேர விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் சரத்குமாரும், "என்னிடம் வருமான வரித் துறையினர் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்' எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com