ஆட்சி-கட்சிக்கு எதிராக கூட்டுச் சதி: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக, பாஜக, மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சதித் திட்டம் தீட்டிவருவதாக அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி,வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆட்சி-கட்சிக்கு எதிராக கூட்டுச் சதி: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக, பாஜக, மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் சதித் திட்டம் தீட்டிவருவதாக அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி,வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுக (அம்மா) கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், மாநிலங்களவை எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
காலை 11.15 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பின்னர் அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றிய தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்தோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து அதனை தொடரும்படி கேட்டுக்கொண்டேன். ஆர்.கே.நகர் தொகுதியில் 57 ஆயிரம் வீடுகளை கட்டும் பணி தொடங்கப்படும். தேர்தலுக்குள்ளாக அந்தப் பணிகள் நிறைவேற்றப்படும்.
நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். என்னுடைய வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர, பறிக்கப்படவில்லை. தேர்தலில் நாங்கள் பணப்பட்டுவாடா செய்யவில்லை. அதை தேர்தல் ஆணையம் கண்காணித்து விசாரிக்கட்டும்; தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.
கூட்டுச் சதி: திமுக ஏற்கனவே பாஜவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி. கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எப்படி நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக, திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் கூட்டணி சேர்ந்துதான், தேர்தலை ரத்து செய்ய பின்னணியாக இருந்திருக்கிறார்கள். இந்த மூவரும் சேர்ந்துதான் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அழிக்க சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பாஜகவுக்கு தொடர்பில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக (அம்மா) கட்சிதான் வெற்றி பெறும். வரும் 17-ஆம் தேதி இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு வரவிருக்கிறது. அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்வோம். கண்டிப்பாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். இல்லையேல் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார் தினகரன்.
முன்னதாக, சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ரத்தானதற்கு தேர்தல் ஆணையமும், மத்திய அரசுமே காரணம்; வெற்றி வாய்ப்பை பொறுக்க முடியாமல் குறுக்கு வழி கையாளப்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்டதாகவும், தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை நடத்துவதற்கு அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com