ஜெயலலிதாவின் கைரேகை பெற அமைச்சரிடம் ரூ.5 லட்சம் வாங்கினேனா? மருத்துவர் விளக்கம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ய, எனக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி. பாலாஜி விளக்கம் அள
ஜெயலலிதாவின் கைரேகை பெற அமைச்சரிடம் ரூ.5 லட்சம் வாங்கினேனா? மருத்துவர் விளக்கம்


சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பதிவு செய்ய, எனக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி. பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் விண்ணப்பத்தில், கட்சியின் பொதுச் செயலர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தினர்.

ஆனால், ஜெயலலிதா சுய நினைவோடுதான் இருக்கிறார். அவரது கையில் மருந்துகள் செலுத்தப்படுவதால் கையெழுத்துப் போடுவது சிரமம் என்பதாலேயே கைரேகை பதிவு செய்யப்பட்டதாக சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி கூறியிருந்தார். இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது சிக்கிய ஆவணங்களில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கிக் கணக்கு விவரம் இடம்பெற்றிருந்தது. அதாவது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, ஒரு வங்கிக் கணக்கில் நடந்த 21 பணப்பரிமாற்ற விவரங்கள் குறித்த பட்டியல் அது.

அந்த பட்டியலில், நவம்பர் 1ம் தேதி டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பட்டியலின் அடிப்படையில், ஜெயலலிதாவின் கைரேகை பெற பாலாஜிக்கு 5 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சமூக வளைதலங்களிலும், வாட்ஸ்-அப்பிலும் தகவல் பரவியது.
 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டாக்டர் பாலாஜி, தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து எந்த பணத்தையும் தான் பெறவில்லை என்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் கைரேகை பெற எனக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக புரளி பரவியுள்ளது. அவ்வாறு எந்த பணத்தையும் நான் வாங்கவில்லை. அதில் உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த பட்டியலில் புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு செய்தியாளர்களுக்கும் பணம் வழங்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மற்றும் அந்த இரண்டு செய்தியாளர்களுக்கு வருமான வரித்துறையினர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com