உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நெடுஞ்சாலையோரத்தில் மதுக்கடைகள்: பொதுமக்கள் அவதி

செங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேசிய நெடுஞ்சாலை, வழிபாட்டு தலங்களை ஒட்டி இயங்கி வரும் அரசு டாஸ்மாக்

செங்குன்றம்: செங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேசிய நெடுஞ்சாலை, வழிபாட்டு தலங்களை ஒட்டி இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உத்தரவிட்டது.
 அதன்படி, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளையொட்டி இருந்த சுமார் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த கடைகளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 இந்நிலையில், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் நெடுஞ்சாலையோரங்களில் மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
 செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் 6 மதுபானக் கடைகளில், 5 கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து மிகுந்ததும், கோயில், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன.
 இங்கு தினமும் காலை 6 மணி முதலே மது விற்பனை தொடங்கி விடுகிறது. செங்குன்றம் காவல் நிலைய பகுதியில் உள்ள 4 மதுக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.
 இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
 நீதிமன்றம் உத்தரவை மீறி பிரதானச் சாலையில் அரசு மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. அதுவும் கிறிஸ்தவ தேவாலயம், ஐயப்பன் கோயில், காவல் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் இந்த மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
 இதனால், பொதுமக்கள் தினமும் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், செங்குன்றம், பாடியநல்லூர் பகுதி மக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தை தொடங்குவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com