தமிழகத்தில் ஏப். 25- இல் முழு அடைப்பு

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25- ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஏப். 25- இல் முழு அடைப்பு

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 25- ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கூட்டியது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யார் யார் பங்கேற்பு?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொண்ட 400-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது. போராட்டத்துக்கான காரணம் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் வருகிற 22-ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடத்துவது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை ஏற்கனவே நடுவர் மன்றம் ஆணையிட்டவாறு அமைத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். அதற்கு மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதோடு கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களைத் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.
மீத்தேன் திட்டமும், ஹைட்ரோ கார்பன் திட்டமும் கைவிடப்பட வேண்டும்.
நெல் - கரும்புக்கு அடிப்படை ஆதார விலை நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்திட உடனே நடவடிக்கை வேண்டும்.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: விவசாயிகளின் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழகச் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
"நீட்' தேர்வு கட்டாயம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அந்தத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்கு அதிமுக அரசு உடனடியாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட "நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கும் மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
கடும் வறட்சி நிலவும் இந்நேரத்தில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை, தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக பங்கேற்கவில்லை: இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.

8 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டத்தில் மார்க்சிஸ்ட்

திமுகவின் அழைப்பை ஏற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடியாக அறிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் மட்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றது.
இந்நிலையில், கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் பங்கேற்றது. இதன் மூலம், திமுக சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றிருக்கிறது.

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு

தில்லியில் போராடும் விவசாயிகளுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து பிரதமர் மோடியைச் சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துக்கூறி உரிய தீர்வு காணத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com