3 அமைச்சர்கள் மீது வழக்கு: விசாரணையை தொடங்கியது சென்னை காவல்துறை: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போலீஸார்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை போலீஸார் திங்கள்கிழமை விசாரணையை தொடங்கினர்.அவர்கள் முதல் கட்டமாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை போலீஸார் திங்கள்கிழமை விசாரணையை தொடங்கினர்.
அவர்கள் முதல் கட்டமாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தும்போது, அங்கு வந்த அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் 3 பேரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனராம்.
அவர்கள் 3 பேரும்,விஜயபாஸ்கர் வீட்டில் இருக்கும்போது, பலத்த பாதுகாப்பையும் மீறி,விஜயபாஸ்கர் வீட்டின் கார் ஓட்டுநர் உதயகுமார்,வெளியே ஒரு ஆவணத்தை வீசினார். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்த வருமான வரித் துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரியும் துன்புறுத்தப்பட்டாராம்.
இதேபோல கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் சரத்குமார் வீட்டிலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தார்.
இச் சம்பவம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை காவல்துறையில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் காவல்நிலைய போலீஸார் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், கார் ஓட்டுநர் உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வருமான வரித் துறையில் விசாரணை: இந்த வழக்கின் விசாரணை,மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக, சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த வருமான வரித் துறை அதிகாரிகளிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் அளித்த தகவல்களை, போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த தடயங்களையும் போலீஸார் பெற்றனர்.
ஆனால் விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீஸார் கூற மறுத்து விட்டனர். இதன் அடுத்த கட்டமாக சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த சாட்சிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com