சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்!

சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேசியதும், தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்!

சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேசியதும், தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் கட்சியில் இணையப் போவதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மா அதிமுக அணி சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன.

சசிகலாவின் குடும்ப ஆட்சி முறையே எதிர்த்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையின் கீழ் எப்படி இணைவார் என்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் அனைத்தும் இப்போது நீங்கி விட்டனவா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இன்று பன்னீர்செல்வம் கூறியதாவது, இணைவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று தான் கூறியது வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. கட்சியில் இணைய நான் புதிதாக எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன் என்பதைத்தான் அவ்வாறு கூறினேன். ஆனால், கட்சியில் இருந்து எந்த கொள்கைகளுக்காக வெளியேறினேனோ, அந்த கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்  அப்பொழுது அவர் கூறியதாவது:

எங்களுடைய அணியின் நிலையை நான் முன்பே ஜெயலலிதா சமாதியிலும், தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். முன்னாள் முதல்வரான எம்ஜிஆரால் அதிமுக ஒரு மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டது. அது ஒரு தனி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்சென்று விடக் கூடாது என்பதில் அவரும், பின்னர் ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். இதுதான் எங்களது உறுதியான நிலைப்பாடும் ஆகும்.

ஜெயலலிதாவின் வழியிலேயே கட்சியும் ஆட்சியும் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் அதிமுக சட்ட விதிகளுக்கு மாறாக கட்சி பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரது நியமனங்களும், கட்சி  நீக்க அறிவிப்புகளும் செல்லாது.

எனவே சசிகலா இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அதே போல இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கண்டிப்பாக நீதி விசாரணை நடைபெறும். அவரது மரணத்தை சூழ்ந்துள்ள மர்மம் நீங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

இதன் மூலம், பதவி ஆசைக்காக கொள்கைகளை விட்டுவிட்டாரா பன்னீர்செல்வம் என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள், டிடிவி தினகரனுக்குத் தெரியாமல்தான் ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அம்மா அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

மேலும், 4 அமைச்சர்கள் சேர்ந்து முடிவு செய்துவிட்டால் போதுமா என்றும், சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது குறித்து கருத்துக் கூறிய வெற்றிவேல், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்குத் தர தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரன் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் இல்லாத சமயத்தில் திங்கட்கிழமை இரவு தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், மற்றொரு பக்கம் தினகரன் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியதற்கும் மிகப்பெரிய காய்நகர்த்தல்கள் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-இல் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து மெளனமாக இருந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிப்ரவரி 8ம் தேதி தனது மெளனத்தை கலைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார்.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் பேசியதன் முழு விவரம்...

பின்னர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

என் மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மெளன அஞ்சலி செலுத்த வந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல்படுத்தியது. அதன் விளைவாகத்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன்.

சுமார் 70 தினங்கள் ஜெயலலிதா உடல்நிலை நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். பின்னர் கழகத்தின் பொதுச் செயலாளராக மதுசூதனனை அமர்த்தவேண்டும் என்று சொன்னார். அதே சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச் சொன்னார். நான் அதை முதலில் ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமர வைத்தால், கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால் நான் மீண்டும் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதன்பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, திவாகர் உங்களிடம் கேட்கச் சொன்னார். "கழகத்தின் பொதுச் செயலாளராக அக்காவை (சசிகலா) ஆக்கவேண்டும், இல்லையென்றால் அவரை நான் ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதான்' என்று சொன்னார்.

அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டேன். அவர்களும் அந்தக் கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலாவை, பொதுச் செயலாளராக்க சம்மதித்தோம்.

இதற்கிடையே வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து முடித்தேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றே அனைத்தும் செய்தேன். இதற்குப் பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம், மெரீனாவில் நடந்தது. சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று கருதி பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தினேன்.
 
ஆனால் பிரதமர் மோடி, மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருமாறு யோசனை கூறினார். அதன்படி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எனது நடவடிக்கையை சரியாக மேற்கொண்டேன்.
 
அந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே, வேறு ஒருவரை முதல்வராக ஆக்கவேண்டும் என்று சொன்னால், அது தேவையில்லாமல் ஒரு பிரச்னையை உருவாக்குமே என்று கேட்டபோது, அவரைக் கண்டித்துவிட்டோம். இனி யாரும் அப்படிப் பேசமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதன் பிறகு செல்லூர் ராஜு, செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தைச் சொன்னார்கள். அதன்பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். நாட்டு மக்களும் தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும் வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் இதுபோன்ற கருத்துகளால் பொது மக்கள் கட்சி மீது அதிருப்தியிலும், கட்சியினர் வருத்தத்திலும் இருப்பதாக கூறினேன்.

மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் நாம் கட்டுப்பாட்டுடன், கவனமுடன், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் கடுகளவும் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொறுமையுடன், எதையும் விளம்பரப்படுத்தாமல் இருந்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

என்னையும் போயஸ் தோட்டத்துக்கு வரும்படி அழைத்தார்கள். நானும் சென்றேன். மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள், பொதுச் செயலாளரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு என்ன அவசரம் என்று கேட்டேன். பொதுச் செயலாளர், முதல்வர் இரண்டு பதவிகளையும் சசிகலாவுக்கே தர வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்கள்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இப்போது ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களே என்றேன். இது நியாயம் தானா என்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் விவாதம் செய்தேன்.

என்னை கீழ்நிலைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட செயல்களை வருத்துத்துடன் எடுத்துக் கூறினேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்த நிலையிலும் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக ஆகும். எனது தாயிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்று கூறி திரும்பிவிட்டேன். என்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திடும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.

யார் முதல்வராக வர வேண்டும்? அம்மாவின் ஆன்மா நாட்டு மக்களுக்கும், கோடானு கோடான தொண்டர்களுக்கும் இதனை தெரியப்படுத்தச் சொன்னதால் இங்கு வந்தேன். கட்சிப் பொறுப்புக்கு அடிமட்ட செயல்வீரர்கள் எண்ணுகிற ஒருவர்தான் பொதுச் செயலாளராக வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் எண்ணுகிற ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும்.

தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். இல்லை. யாரோ ஒருவர் இன்றைக்கு கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிற நல்ல பெயரை காப்பாற்றும் ஒருவர் வர வேண்டும். இந்த எண்ணத்தில்தான் இப்போது இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கடைசியாக உறுதியாக இருப்பேன். தன்னந்தனியாக இருந்து போராடுவேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், நான் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவமானப்படுத்தப்பட்டேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வர வேண்டுமென, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை வலியுறுத்துகிறார். மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்.

இதையடுத்து, நான் சில அமைச்சர்கள் சில எம்.எல்.ஏ.க்களை அழைத்து அதிமுகவின் ஒற்றுமையை கருதி, ஆட்சியை நிலைமை கருதி கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது என்று வேண்டாம் என்று சொன்னேன்.

முதல்வராக அமர வைத்து, ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள் என்றே கேட்டேன். தனிப்பட்ட முறையில் என்னை இகழ்ச்சியாக அவமானப்படுத்திப் பேசினால், பொறுத்துக் கொள்வேன். பொது வாழ்க்கைக்கு வந்தால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டிருந்தேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பன்னீர்செல்வம், முதல்வராக பணியாற்றிய போது தமிழக மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, தானே நேரடியாக புது தில்லி சென்று, அவசரச் சட்டம் இயற்றி, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தவர்.

தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலின் போதும், தீவிர நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரண உதவி கிடைத்ததால், சிறந்த நிர்வாகியாகவும் பேசப்பட்டார்.

ஆந்திராவுக்கு நேரடியாகச் சென்று கிருஷ்ணா நதி நீர் விவகாரம் குறித்து அம்மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநில பிரச்னைகளில் நேரடியாகவே தலையிட்டு பணிகளைச் செய்த பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், திடீரென சசிகலா அணியில் இணைவதாகக் கூறியதும், அவர் மீதான நன் மதிப்புகள் மளமளவென சரியத் தொடங்கியது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற பழமொழி இருந்தாலும், ஒரு முழு அரசும் தனக்கு எதிராக இருக்கும் போது, ஐந்தாண்டு பதவி, ஆட்சி என எதையும் சிந்திக்காமல், சசிகலாவுக்கு எதிராகக் கொடி பிடித்த முதல் நபர் பன்னீர்செல்வம்தான்.

அதன்பிறகு அவரது அணியில் முக்கிய நபர்கள் இணைந்தனர். மிகப்பெரிய அரசியல் போராட்டத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பன்னீர்செல்வம் தோல்வியடைந்தாலும், மக்கள் மனதில் ஒரு சிம்மாசனம் போட்டுவிட்டார்.

தற்போதும், தமிழக அரசில் பதவி கிடைக்கும் என்றாலும்  தனது கொள்கைகளில் இருந்து சற்றும் பின்வாங்காமல்  பன்னீர்செல்வம் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏன் வாய் திறக்கவில்லை, முதல்வராக பதவியில் இருந்த போது ஏன் வாய் திறக்கவில்லை, பதவி போனதால்தானே வாய் திறந்தார் என்று கேட்கும் நபர்களுக்கு எல்லாம், தனது செயல்கள் மூலமாகவே பதில் கொடுத்துள்ளார் பன்னீர்செல்வம்.

இந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்ற முடிவை எடுக்கும் நல்வாய்ப்பு தமிழக அமைச்சர்களின் பக்கம் திரும்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com