தமிழகத்தில் 48 டிகிரி வெயில் கொளுத்துமா? புரளியால் மக்கள் கடும் அதிர்ச்சி

அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாக வெளியான வாட்ஸ்-அப் புரளியால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் 48 டிகிரி வெயில் கொளுத்துமா? புரளியால் மக்கள் கடும் அதிர்ச்சி


சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பம் நிலவும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாக வெளியான வாட்ஸ்-அப் புரளியால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 107 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப்-களில் அடுத்த 3 நாட்களுக்கு 45.1 முதல் 48.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும், முற்பகல் 11 மணி முதல் 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், இதனை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புமாறு வெளியான புரளி வேகமாகப் பரவியது.

இது குறித்து பேஸ்புக்கில் தமிழ்நாடு வானிலை குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 45 - 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சென்னையில் வெப்பம் அதிகரிக்கும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை. ஆனால், வெப்பம் அதிகமாகவே இருக்கும், ஏசி இல்லாத பள்ளிகள் என்றால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

சென்னையில் நேற்று வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அளவை விட தாண்டியது. கடற்கரை காற்று வீசியும், வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிவிட்டது. ஆனால், வாட்ஸ் அப்பில் பரவும் தகவலைப் போல 45 டிகியைத் தாண்டாது. இது வேலையில்லாத நபர்களால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. எனவே இதுபோன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் உயரும். ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், சென்னையின் உள் பகுதிகளிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். கடற்கரையில் இருந்து தொலைவில் இருக்கும் சென்னையின் உள் பகுதிகளில் கடற்கரைக் காற்று வீசுவது குறைவாகவே இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் 40+ டிகிரியாக இருக்கும். எனவே, வீட்டை விட்டுப் புறப்படும் போது, கையில் குடை அல்லது தொப்பி அவசியம் இருக்க வேண்டும். தலையில் நேரடியாக சூரிய வெளிச்சம் படுவதை நிச்சயம் தவிர்த்து விட வேண்டும். ஏன் என்றால் அப்படி படுவதால், உங்கள் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்துவிடும். இதை மட்டும் செய்யும், வேறு எதற்கும் பயப்படாதீர்கள்.

கடந்த 2003ம் ஆண்டுதான் சென்னையில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. இதுவே இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். எனவே 45-48 டிகிரி வெப்பம் என்று வெளியாகும் தீயாகப் பரவும் புரளிகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?

முன்னதாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று  கோடை வெயில் 106 பாரன்ஹீட்டை தொட்டது. ஒரே நாளில் திடீரென இன்று வெப்பம் அதிகரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் சித்திரை மாதம் பிறந்த பிறகு நேற்றும், இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது.

சென்னையில் நேற்று 39.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் மிக அதிகமான வெப்பம் பதிவான நாட்களில் ஏப்ரல் 16 ஆன ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 40.8 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்த அளவுகளை எல்லாம் இன்றைய வெயில் தாண்டிவிட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், பூமிப்பரப்பின் மீதிருந்த காற்றின் ஈரப்பதம் குறைந்து, வெப்பக் காற்று வீசியது. எனவே, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்களும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

சென்னையில் இன்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்றை விட இன்று காலையிலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அலுவலகம் செல்வோர் அனைவருமே இதனை காலையில் உணர்ந்திருப்பார்கள்.

இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் 41.4 முதல் 41.8 டிகிரி அளவுக்கு வெப்பம் வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com