கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! ராமதாஸ்

கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! ராமதாஸ்

கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், 15 ஆண்டுகளாகியும் அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 83 அரசு கல்லூரிகளில் சுமார் 3600 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் 2002 ஆம் ஆண்டு முதலும், பலர் 1996 ஆம் ஆண்டிலிருந்தும் இந்த பணியில் உள்ளனர். எம்.ஃபில் முதல் முனைவர் பட்டம் வரை கல்வித்தகுதி பெற்றுள்ள இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மாதத்திற்கு ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அதிலும் ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் போதுமானதல்ல என்பதால் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின்படி ரூ.25,000 மாத ஊதியம் வழங்க வேண்டும், கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் இந்த கோரிக்கைகளுக்காக கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியது. அதைத்  தொடர்ந்து தான் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதைத்தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்துக் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவையோ அல்லது நிறைவேற்றக் கூடாதவையோ அல்ல. அவற்றை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கலும் இல்லை. கவுரவ விரிவுரையாளர்களின் நலனில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததே இதற்கு காரணமாகும்.

2011-ஆம் ஆண்டு அதிமுக விடுத்த தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களில் பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள். அவர்களால் இதற்கு மேல் வேறு பணிக்கு மாறுவது என்பது சாத்தியமற்றது. 

கடந்த காலங்களில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியோருக்கு அரசு  பணி நிலைப்பு வழங்கியிருக்கிறது. 1988, 1993 ஆகிய ஆண்டுகளில் அரசு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு  நீதிமன்றங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. அண்மையில் கூட புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரிகளில்  பணியாற்றிய ஒப்பந்த விரிவுரையாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற்று பணி நிலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ  விரிவுரையாளர்களையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்று நிரந்தரம் செய்ய முடியும்.

தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது ஆகும். கடந்த 20 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாகவே இருந்து வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர்கள் தொலைத்துவிட்டனர். எனவே, அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் பணி நிலைப்பு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com