என்னாது சென்னையைக் காணோமா? வடிவேல் சொல்லவில்லை, கூகுள் மேப் சொல்லுது

சென்னையைக் காணவில்லை.. ஆம் நீங்கள் படிப்பது சரியாகத்தான் உள்ளது. கூகுள் மேப்பில் திடீரென சென்னை காணாமல் போயுள்ளது. 
என்னாது சென்னையைக் காணோமா? வடிவேல் சொல்லவில்லை, கூகுள் மேப் சொல்லுது


சென்னை: சென்னையைக் காணவில்லை.. ஆம் நீங்கள் படிப்பது சரியாகத்தான் உள்ளது. கூகுள் மேப்பில் திடீரென சென்னை காணாமல் போயுள்ளது. 

கூகுள் மேப்பில், சென்னை இருக்க வேண்டிய இடத்தில் கோவூர் என்று தவறாகப் பதிவாகியிருந்தது.

கூகுள் மேப்பில் இந்த குளறுபடி நேர்ந்துள்ளது. அதாவது, மேற்கு சென்னையின் ஒரு பகுதியான கோவூர், போரூரில் போரூரில் இருந்து இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகள் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை என்பதற்கு பதில் கோவூர் என்று இருந்தது.

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்திலும் கோவூர் என்ற ஒரு பகுதி உள்ளது வேறு விஷயம்.

இது கூகுள் மேப்ஸ் செய்த மிகப்பெரிய முதல் தவறு என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. கூகுள் மேப் இதுபோல பல முறை மிகப்பெரிய தவறுகளை நிகழ்த்தியிருப்பதுதான் உண்மை.

2010ம் ஆண்டு கோஸ்டா ரிகாவின் கலெரோ தீவினை நிகராகுவேயின் பகுதியாக கூகுள் மேப் காட்டியது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தலையிடு முடித்து வைத்தது.

ஜெர்மனியின் எம்டன் துறைமுகப் பகுதிகளை, அண்டை நாடான நெதர்லாந்துடையதாக மாற்றி, 2011ம் ஆண்டு கூகுள் மேப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அமெரிக்காவில் ரவுன்ட் வேல்லி ஸ்டேட் பார்க் என்று சுற்றுலாப் பயணிகள் யாராவது கூகுளில் தேடினால், அது ஒரு பெண்ணின் வீட்டு வாயிலை காட்டியது.

இது குறித்து 2011ம் ஆண்டு ஏபிசி நியுஸ் ஊடகம், நியூ ஜெர்ஸியின் ஹன்டர்டான் கௌண்டியில் வசித்து வந்த  லாரிய நைடிங் என்ற பெண்ணை பேட்டி கண்டது. அப்போது, அமெரிக்காவில் சுற்றுலா வரும் பயணிகள் கூகுள் மேப்பில் ரௌண்ட் வேலியை தேடினால், அவர்களுக்கு என் வீட்டு முகவரிதான் பதிலாகக் கிடைத்தது. இதனால், என் வீட்டுக்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர். இதனால், என் வீட்டு வாயிலில், ஒரு பெரிய விளம்பரப் பலகை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதில், "இது பூங்காவின் நுழைவாயில் இல்லை. இது தனிப்பட்ட ஒருவரின் வீட்டு வாயில். கூகுள் மேப் தவறாக உள்ளது" என்று எழுதப்பட்டது என்றார்.

இவ்வளவையும் செய்துள்ள கூகுள் தற்போது சென்னை இருந்த இடத்தை கோவூருக்கு மாற்றியுள்ளது. அவ்வளவுதான். 

கூகுள் மேப்பில் சென்னை காணாமல் போன சம்பவத்தைப் பார்த்த பிறகு, அஜித் - நக்மா நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே மேப்பில் இருந்து காணாமல் போனது தான் நினைவில் வருகிறது. அதற்கும் கூகுள் மேப்புக்கும் சம்பந்தம் இருக்குமோ?!

 (உடனே கூகுள் மேப்பில் தேட வேண்டாம்.. இது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படும் தாற்காலிக தவறு.) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com