டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வரவில்லை: தில்லி காவல்துறை விளக்கம்

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இன்று சென்னை வரவில்லை என்று தில்லி குற்றப் பிரிவு தலைவர் மதூர் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.

புதுதில்லி: டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த இன்று சென்னை வரவில்லை என்று தில்லி குற்றப் பிரிவு தலைவர் மதூர் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் முடக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரகசிய பேரத்தில் ஈடுபட்ட தகவல் வெளியானது. தேர்தல் கமி‌ஷனில் தனது செல்வாக்கை பயன்படுத்தி சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி பேரம் பேசியதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் (27) என்பவர் தில்லி ஹாட்டலில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீஸார் சுகேஷ் சந்திரசேகர் தங்கியிருந்த ஹாட்டல் அறையில் ரூ.1 கோடியும், அவரிடமிருந்த ரூ.30 லட்சத்தையும் பறிமுதல் செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

அதில், அதிமுகவின் அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு உள்ளதாகவும் சுகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திராவை போலீஸார் தில்லி தனிநீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி 8 நாட்கள் (ஏப்.25) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். தொடர்ந்து போலீஸார் சுகேஷ் சந்திராவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு சம்மனுடன் போலீஸ் குழுவை சென்னைக்கு அனுப்புவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் லஞ்ச புகார் வழக்கு தொடர்பான சம்மனுடன் தில்லி போலீஸார் சென்னை வரவுள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு  தினகரன் கைது செய்யப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், தினகரனிடம் விசாரணை நடத்த இன்று சென்னை வந்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பொய்யானது என்றும் வரும் நாள்களில் தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வரவுள்ளதாக தில்லி குற்றப் பிரிவு தலைவர் மதூர் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com