தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி பாஜக: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றுசக்தியாக இருப்பது பாஜகதான் என்றார் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

தஞ்சாவூர்: தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றுசக்தியாக இருப்பது பாஜகதான் என்றார் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா.
தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக தஞ்சை மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நாடுமுழுவதும் மோடி என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வெற்றிபெறப் போகிறது.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டித்துவிட்டனர். அம்மாநில மக்கள் மோடியை ஆதரித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. அமைச்சர்களும், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளனர். மறுபுறம் மத்தியில் ஐக்கிய முற்போக்கு அரசில் அங்கம் வகித்த திமுகவும் ஊழல் புகாரை எதிர்கொண்டு வருகிறது.
நாட்டில் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் இப்போது சிறு கட்சியாகிவிட்டது. முன்னாள் நிதி அமைச்சரின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பாஜக யாரையும் இலக்கு வைக்கவில்லை. ஆனால், ஊழல் நபர்களை பாஜக விடாது. ஊழலை ஒழித்து ஆரோக்கியமான அரசியலையும், சமூகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக பாஜக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான சூழல் உருவாகி வருகிறது. பாஜக தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் அவர்.
பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ தலைமை வகித்தார். பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேட்டி: முன்னதாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நலனுக்காகப் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி, திருப்பூர், கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்படவுள்ளன.
இதில், கன்னியாகுமரி, திருப்பூரில் இம்மருத்துவமனைகள் அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலன் கருதி இம்மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருச்சி, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனைகளையும் விரிவுபடுத்த தேவையான இடத்துக்கு தமிழக அரசு உதவிசெய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com