கூவாகம் கூத்தாண்டவர் கோயில்திருவிழா ஏப்.25-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருகிற 25-ஆம் தேதி

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருகிற 25-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது.
26-ஆம் தேதி தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று பாரதம் சொற்பொழிவு தொடங்கி, தொடர்ந்து 18 நாள்கள் வரை விழா நடைபெறும். 27-ஆம் தேதி சந்தனு சரிதம் நிகழ்ச்சியும், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
28-ஆம் தேதி பீஷ்மர் பிறப்பும், 29-ஆம் தேதி தருமர் பிறப்பும், 30-ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், மே 1-ஆம் தேதி பகாசூரன் வதமும், 2-ஆம் தேதி பாஞ்சாலி திருமணமும், 3-ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், 4-ஆம் தேதி ராஜசுய யாகமும் நடைபெறும்.
5-ஆம் தேதி வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சியும், 6-ஆம் தேதி கிருஷ்ணன் தூதும், 7-ஆம் தேதி அரவான் பலியும், கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாயணமும், 8-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மே 9-ஆம் தேதி இரவு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான இதில், தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்வர்.
அரவானிகள் மணப்பெண்களைப் போல அலங்கரித்துக் கொண்டு, பூசாரிகள் கைகளால் தாலி கட்டிக் கொள்வர், அன்றிரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.
10-ஆம் தேதி அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர், அரவான் சுவாமிக்கு 108 தேங்காய், 1008 தேங்காய் என சூரை தேங்காய் உடைப்பர். இதைத் தொடர்ந்து, சகடையில் கம்பம் நட்டு வைக்கோல் பிரி சுற்றப்படும். இதுவே அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாகும்.
பின்னர், கீரிமேட்டிலிருந்து அரவான் புஜங்கள், மார்பு பதக்கமும், சிவிலியான்குளம் கிராமத்திலிருந்து அரசிலை, விண்குடை கொண்டு வரப்படும். நத்தம் கிராமத்திலிருந்து பாதம், கைகள் உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட உடல் பாகங்களிலிருந்து அரவான் திருவுருவம் அமைக்கப்படும். அதன்பிறகு தேரோட்டம் நடைபெறும்.
தேரோடும் வீதிகளில் தேர் வலம் வந்து, அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் திருநங்கைகள் கூட்டம் கூட்டமாக ஒப்பாரி வைத்து அழுவர். பின்னர், தேர் நத்தம் எனப்படும் பந்தலடிக்கு வந்தடையும். அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அப்போது, திருநங்கைகள் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்து நொறுக்குவர்.
பின்னர், தாலிகளை அறித்து விட்டு, வெள்ளை உடை அணிந்து சோகமாய் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வர். மே 11-ஆம் தேதி விடையாத்தியும், 12-ஆம் தேதி தருமர் பட்டாபிஷேகமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com