பாகுபலி சர்ச்சை: சத்யராஜுக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது! அன்புமணி ராமதாஸ்

கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாகுபலி சர்ச்சை: சத்யராஜுக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது! அன்புமணி ராமதாஸ்

கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி பிரச்னையில் கன்னடர்களை நடிகர் சத்யராஜ் தாக்கிப் பேசியதாகவும், அதைக் கண்டித்து அவர் நடித்த பாகுபலி-2  படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.

பாகுபலி -2 திரைப்படம் ஆந்திரத்தைச் சேர்ந்த இயக்குனரால் அம்மாநிலத்தை மையமாகக் கொண்ட கற்பனை கலந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம்  உள்ளிட்ட பலமொழி பேசும் கலைஞர்கள் நடித்துள்ளனர். இதை ஒரு பிரமாண்டமான கலைப் படைப்பாக மட்டும் தான் பார்க்க வேண்டும்; இரசிக்க வேண்டும். அதற்கு மாறாக, கன்னடர்களை கடுமையாக விமர்சித்த தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்... அதனால் அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதும், அதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டுவதும் சகிப்பற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட, வெறுப்பு அரசியலின் அடையாளங்களாகும்.

காவிரிப் பிரச்னைக்கான போராட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் நடிகர்  சத்யராஜ் கன்னடர்களை இழிவுபடுத்தியோ, தரக்குறைவாகவோ பேசவில்லை. காவிரிப்பிரச்னையில் தமிழகத்திற்கு உள்ள நியாயங்களைத் தான் எடுத்துக் கூறினார். இதை சத்யராஜின் கருத்தாக பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டும். காவிரிப் பிரச்னை குறித்து ஒரு நடிகர் கூறிய கருத்துக்களை அவர் நடித்த திரைப்படங்களுடன் இணைத்துப் பார்த்து சர்ச்சைகளை எழுப்புவது முறையல்ல. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு சத்யராஜ் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. பாகுபலி -1 திரைப்படத்தில் கூட நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவ்வாறு இருக்கும் போது சத்யராஜ் காவிரிப் பிரச்னைக்காக குரல் கொடுத்ததைக் காரணம் காட்டி அவருக்கும், அவர் நடித்த திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்படுத்துவது நல்லதல்ல. இது கெட்ட நோக்கம் கொண்ட அரசியலாகும்.  தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க முயற்சிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராகவும், தில்லியில் 38 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களை திசைத் திருப்பும் நோக்குடன் தான் கர்நாடகத்தில் இப்படி ஒரு சிக்கலை சில கட்சிகள் தூண்டிவிடுவதாக தோன்றுகிறது. இத்தகைய போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக கன்னட மக்கள் குறித்து பேசிய பேச்சுக்களுக்காக நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில் காவிரிப் பிரச்னை உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது அவரது துணிச்சலையும், கொள்கை உறுதியையும் காட்டுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். சத்யராஜின் விளக்கத்திற்குப் பிறகும் கர்நாடகத்தில் பல இனவாத அமைப்புகள் அவரது உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

தமிழ் திரையுலகில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்களும், கலைஞர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் பல நேரங்களில் சொந்த மாநில உணர்வுடன் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சத்யராஜ் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் கடைபிடிக்கும் அதே அணுகுமுறையை தமிழகமும் கடைபிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழர்களும் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை விரும்புபவர்கள் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். இந்தியாவில் அனைத்து மொழி பேசுபவர்களும் சகோதரர்கள்; அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். பா.ம.க.வும், தமிழர்களும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் நிலையில் அதை சிதைக்கும் வகையில் கன்னட அமைப்புகள் செயல்படக்கூடாது.

கன்னட அமைப்புகளின் வன்முறை மற்றும் மிரட்டல்களை அம்மாநில அரசு கண்டும் காணாமலும் இருப்பது வருத்தமளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் காவிரிக்கு எதிரான போராட்டத்தை கண்டும் காணாமலும் விட்டதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், சரக்குந்துகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. தமிழர்கள் கடுமையான இன்னலுக்குள்ளானார்கள். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது. நடிகர் சத்யராஜ், பாகுபலி திரைப்படம் ஆகியவற்றுக்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டங்களை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com