அதிமுக அணிகளின் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடக்கம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அணிகளின் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடக்கம்

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான முயற்சியில் நேற்று முன்தினம் திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுகவின் இரு அணிகள் இணைப்புப் பற்றி பேச்சு நடத்த அதிமுகவின் இரு அணிகளிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி (அதிமுக அம்மா அணி) சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் அவருடன் சேர்த்து 8 பேர் கொண்ட குழுவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி (அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவருடன் சேர்த்து 7 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்.21) காலை வந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எம்.பி., ஆர். வைத்திலிங்கம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய 7 பேர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்? என்பது குறித்தும் பேசினார்கள்.

இதுபோல் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அவரையும் சேர்த்து பேச்சுவார்த்தைக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மாஃபா. க. பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் இடம் பெற்றுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட ஏழு பேரும் அதிமுக அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினருடன் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடங்குகிறது. அப்போது, இரு தரப்பினரும் சந்தித்து பேசுவார்கள். நிபந்தனைகள் குறித்து அப்போது முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com