கரூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க முட்டுக்கட்டை: தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி புகார்

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை இருவரும் முட்டுக்கட்டை போடுவதாக அரவக்குறிச்சி எம். எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
கரூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க முட்டுக்கட்டை: தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி புகார்

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை இருவரும் முட்டுக்கட்டை போடுவதாக அரவக்குறிச்சி எம். எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
கரூர் வாங்கலில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 2014 ஆக. 8-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும என அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தேன். இதையேற்று ஆக. 12-இல் பேரவையில் 110 விதியின் கீழ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலர், அமைச்சர் ஆகியோர் கல்லூரி அமைக்க இடம் தானமாக வேண்டும் என்றனர். இதனால் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் பொதுமக்கள் தானமாக அளித்த 25.63 ஏக்கர் நிலம் மக்கள் நல்வாழ்வுத்துறை பெயரில் பதிவு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு 21.1.2016-இல் இறுதி செய்யப்பட்டு, 12.2.2016-இல் தனியார் கட்டுமான நிறுவனத்துக்குப் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவக் கல்லூரியை கரூர் நகராட்சிப் பகுதியில் உள்ள சணப்பிரட்டி கிராமத்தில் அமைக்க மாற்று ஏற்பாடு செய்தனர். சணப்பிரட்டியில் இருப்பது வெறும் 15.28 ஏக்கர் மட்டுமே. இங்கு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குத் தேவையான வசதிகள் இல்லை. 
இதையறிந்த வாங்கல் குப்புச்சிபாளையத்தில் தானமாக நிலம் கொடுத்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மருத்துவக் கல்லூரி கட்டக்கூடாது என தடை உத்தரவு வாங்கினர். 
நான் வாக்காளராக உள்ள எனது சொந்தத் தொகுதியில் நான் கொண்டு வந்த கல்லூரி அமைக்கும் திட்டத்தை வேண்டுமென்றே தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் தடுக்கிறார்கள். வாங்கல் குப்புச்சிபாளையத்தில் எனக்கு பினாமி பெயரில் எந்த ஒரு நிலமும் கிடையாது. அதை நிருபித்தால் போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன். அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அரசாணை வாங்கல் குப்புச்சிபாளையம் இடத்திற்கு மட்டுமே உள்ளது. சணப்பிரட்டியில் கல்லூரி அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டவில்லை. 
நான் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரித் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்துவேன். காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டாலும் திட்டமிட்டபடி வரும் 28-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
அண்மையில் தினகரனை சந்தித்ததில் உள்நோக்கம் கிடையாது. அது நட்புரீதியான சந்திப்புதான். அதிமுகவில் இரு அணிகளும் இணைவது நிச்சயம். இரட்டை இலை சின்னத்தையும் விரைவில் மீட்டெடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com