தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இப் போராட்டத்துக்கு வணிகர் சங்கப் பேரவை, வணிகர் சங்கப் பேரமைப்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக தமிழகத்தில் ஏப்ரல் 25-இல் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
65 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு: வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். தமிழகம் முழுவதும் 65 லட்சம் கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டு மாவட்டத் தலைநகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வெள்ளையன் கூறினார்.
போக்குவரத்து பாதிக்கப்படுமா?: முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எஃப், எம்எல்எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் முழு அடைப்பில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளன.
பலத்த பாதுகாப்பு: முழு அடைப்புப் போராட்டத்தில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை. முழு அடைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. பேருந்துகளை வழக்கம்போல் இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com