பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுவை, காரைக்காலில் வாக்களித்த பிரெஞ்சு மக்கள்

பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள். (வலது) வாக்குச்சாவடி வளாகத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.
புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள். (வலது) வாக்குச்சாவடி வளாகத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு மக்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் பிரான்ஸýவா ஃபில்லோன், பெனுவா ஹாமோன், மரீன் லெபென், இமானுவல் மேக்ரான், ஜான் லுக் மெலென்கான் ஆகிய 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 
தேர்தலில் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு உள்பட்ட புதுச்சேரி, தமிழகம், கேரளம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகளில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவர் சுமார் 5000 வாக்காளர்களுக்காக 6 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, புதுச்சேரி துணை தூதரகம், அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் தலா 2 மையங்களும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. 
புதுச்சேரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்களது வாக்கைச் செலுத்த ஆர்வமுடன் வந்தனர். 
இந்திய முறைப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல், வாக்குச்சீட்டு முறைப்படி பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது.
சென்னை, காரைக்காலில் நடைபெற்ற தேர்தலின் வாக்குப்பெட்டிகள், புதுச்சேரி துணை பிரெஞ்சு தூதரகத்துக்கு கொண்டு வரப்பட்டு, இங்கு பதிவான வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பிரான்ஸ் நாட்டுக்கு தெரிவிக்கப்படும்.
இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், முதல் இரண்டு இடங்களைப் பெறும் வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு வரும் மே 7-ஆம் தேதி நடைபெறும்.
காரைக்காலில்... காரைக்கால் தெய்தா வீதியில் உள்ள இகோல் எலிமென்டரி என்ற பிரெஞ்சுப் பள்ளிக் கட்டடத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. இதில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வசித்துவரும் பிரெஞ்சு குடியுரிமைதாரர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
காரைக்காலில் 535 வாக்காளர்கள், பதிவு செய்யப்பட்டபடி காலை 8 முதல் இரவு 7 மணி வரை வாக்களித்தனர். புதுச்சேரியிலிருந்து வந்த பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்காளர்கள் தங்களது பிரான்ஸ் நாட்டின் கடவுச்சீட்டு, புகைப்பட அடையாள அட்டையைக் ஆவணமாகக் காட்டி தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com