தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை

தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்தால்
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை

சென்னை: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருளுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, லாரிகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் உரிய பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக பலவிதமான நூதனமான போராட்டங்களை நடத்தி வந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், எதிர்கட்சிகள் இன்று அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் ஆதரவு இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் எந்தவித சிரமமும் காணப்படவில்லை.

சென்னையில் அனைத்து பேருந்துகளும், ஆட்டோக்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. இதனால் அலுவலகம் செல்வோர் எவ்வித சிரமமுமின்றி, தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால், பால், காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்படுள்ளனர். இவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com