தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மணியை கைது செய்க! ராமதாஸ் 

தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மணியை கைது செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மணியை கைது செய்க! ராமதாஸ் 

தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள அமைச்சர் மணியை கைது செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை கேரள மின்துறை அமைச்சர் எம்.எம். மணி மிகவும் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். பெண்மையை இழிவுபடுத்திய அவரை கேரள அரசு தண்டிக்காமல் பாதுகாப்பது வருத்தமளிக்கிறது.

இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2015&ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய பெண்கள், தங்களின் கோரிக்கைகளை வென்றெடுத்தனர். உரிமைகளுக்காக போராடிய பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண்கள் ஒற்றுமை என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி, தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவு மூணாறு அருகே அடிமாலி நகரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.எம்.மணி,‘‘ பெண்கள் ஒற்றுமை அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இரவைக் கழிப்பவர்கள்’’ என்று பேசியிருக்கிறார். மணியின் இந்த பேச்சுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் போதிலும் அவர் மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் வலிமையான மகளிர் அமைப்பை நடத்தி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர்கள் அடிக்கடி பெருமிதப்படுவார்கள். அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவரே உரிமைக்காக போராடும் தமிழ் பெண்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். அதைக் கண்டிக்கவோ, அமைச்சர் மணி மீது நடவடிக்கை எடுக்கவோ மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை முன்வரவில்லை. உலகில் எங்கெங்கோ பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைக்கு எதிராக மட்டும் வாயை இறுகக் கட்டிக் கொண்டு மவுனம் கடைபிடிக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று தொழிலாளர் உரிமைக்காக குரல் எழுப்புவது ஆகும். அந்தப் பணியைத் தான் பெண்கள் ஒற்றுமை அமைப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு உரிமைகளுக்காக போராடும் பெண்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இழிவுபடுத்துவதையும், அதை அக்கட்சித் தலைமை ஆதரிப்பதையும் பார்க்கும் போது தொழிலாளர் நலன் மற்றும் உரிமை, பெண்ணுரிமை குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கங்கள் அனைத்தும் போலியானவை என்பது அம்பலமாகிறது. இதில் கொடுமை என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சர் மணியால் விமர்சிக்கப்பட்ட பெண்கள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டின் கடந்த 2015&ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வாரங்களுக்கு முன் அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல், விலகிய நிலையில் அவரையும் அவரது சக நிர்வாகிகளையும் 71 வயது அமைச்சர் மணி அநாகரீகமாக விமர்சித்திருக்கிறார். பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு இதுதான் போலிருக்கிறது.

பெண்களை மதிக்காத எந்த சமுதாயமும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை உணரவேண்டும். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மணியை கேரள முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் மணி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354&ஆவது பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com