தமிழகத்தில் பள்ளிகள் மூடல்; 'நீட்' பயிற்சிக்காக திருச்சூருக்கு படையெடுக்கும் மாணவர்கள்

தமிழகத்தில் நிலவும் மோசமான வெப்பநிலை காரணமாக, அனைத்துப் பள்ளிகளையும் மூடவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் மூடல்; 'நீட்' பயிற்சிக்காக திருச்சூருக்கு படையெடுக்கும் மாணவர்கள்

சென்னை: தமிழகத்தில் நிலவும் மோசமான வெப்பநிலை காரணமாக, அனைத்துப் பள்ளிகளையும் மூடவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக, தமிழக மாணவ, மாணவிகள் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நீட் பயிற்சி வகுப்புகளுக்கு படையெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், கேரளாவில் இருக்கும் 'பேராசிரியர் பி.சி. தாமஸ் கிளாஸஸ்' போன்ற புகழ்பெற்ற பயிற்சி வகுப்புகளில் சேரவே மேற்கு மற்றும் தென் தமிழக மாணவர்கள் விரும்புகின்றனர்.

மேலும், தமிழகத்தில் பொதுவாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை எடுத்து, அடுத்த டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்துவிடுவது வழக்கம்.
 
ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டதால், மாணாக்கர்கள், மாற்றுவழிகளைத் தேடத் தொடங்கிவிட்டனர் என்கிறார் மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர்.

மேலும், கேரளாவில் இருக்கும் பயிற்சி மையங்களில் படித்த மாணவ, மாணவிகள் ஆண்டு தோறும் தேசிய அளவில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள்.

பல பயிற்சி மையங்கள், இதுபோன்ற சிறப்பு வகுப்புளுக்கு ரூ.18 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சென்னை மற்றும் மற்ற நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களைக் காட்டிலும், திருச்சூரில் உள்ள பயிற்சி மையங்களுக்கான கட்டணம் மற்றும் இதர செலவுகள் குறைவு உட்பட பல சாதகங்கள் இருப்பதால் தான் திருச்சூர் பயிற்சி மையத்தை தேர்வு செய்ததாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவர் எம்.விக்னேஷ் கூறியுள்ளார்.

பணம் செலவழித்து பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புக்கு அனுப்ப வசதி இருக்கும் பெற்றோர், பக்கத்து மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். வசதி இல்லாதவர்கள் மட்டுமே தங்கள் பகுதியிலேயே இருக்கும் பயிற்சி மையங்களுக்குச் செல்கிறார்கள்.

தமிழ்நாடு தனியார் மெட்ரிக் பள்ளிக் கழகத்தைச் சேர்ந்த பி. விசாலாட்சி கூறுகையில், கோடைக் காலத்தில் மாணவர்களுக்கு பள்ளி வகுப்பறைதான் சிறந்ததாக இருக்கும். காலையில் வெயில் தொடங்கும் முன்பே, பள்ளிக்கு வந்து, வெயில் தாழ்ந்த பிறகு பள்ளியில் இருந்து கிளம்பும் வகையில் பள்ளி நேரம் இருக்கும்பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பதை கட்டாயமாக்கத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், பள்ளி திறந்ததும், வார இறுதி நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி, பள்ளி செயல்படும் நேரத்தை கூட்டி, டிசம்பருக்குள் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com