அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை

அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை

அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவை இணைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் கடந்த திங்கள்கிழமை (ஏப்.24) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா, தினகரன் குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை மீண்டும் கூறி, அதை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறினர். சசிகலாவின் படங்களை அகற்ற முடியாது எனது சசிகலா அணியனர் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (ஏப் 25) கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலாவின் படங்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக (அம்மா) அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் இணைவது தொடர்பாக, நேற்று இரவு சென்னையில் உள்ள  தனியார் ஹோட்டல் ஒன்றில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. செங்கோட்டையன், வைத்தியலிங்கம் - முனுசாமி, விசுவநாதன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில்,
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாஃபா. க. பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கொண்ட இரு அணியினரும் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com