தொப்பியையும் மாட்டமுடியாம, இரும்புக் கூண்டுக்குத் தயாரான டிடிவி. தினகரனின் பின்னணி..?

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொப்பியையும் மாட்டமுடியாம, இரும்புக் கூண்டுக்குத் தயாரான டிடிவி. தினகரனின் பின்னணி..?

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (ஏப். 25) கைது செய்யப்பட்டனர்.

திகார் சிறைவாசத்துக்கு தயாராகும் டிடிவி தினகரனின் அரசியல் ஏற்ற... இறக்கங்களின் பின்னணி விவரம்:  

- திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - வனிதாமணி தம்பதிக்கு மூத்த மகன் தினகரன்.

- சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது சொந்த மாமன் மகளையே திருமணம் செய்தார்.

- அதிமுகவின் மிக முக்கியமான பதவியான பொருளாளர் பதவி.

- தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்கள். இவர்களில் சுதாகரன்தான் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர்.

- 1999-ஆம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது.

- 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் தில்லி சென்றார்.

- 1998-ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரனின் அரசியல் வாழ்க்கை இறங்குமாகவே இருந்தது.  

- 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் போயஸ் தோட்டத்தைவிட்டே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மன்னார்குடிக்கு விரட்டி அடித்தார்.

- 2016 செப். 22: நள்ளிரவு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சை நடந்தபோதும், டிச.5-ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இரவோடு இரவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அடுத்த முதல்வராக பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டார்.

- தொடர்ந்து தன்னை அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் நியமிக்கும் காய் நகர்த்தல் வேலையில் இறங்கினார் சசிகலா.

- இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

பிப்.7: இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானத்தை துவக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் பன்னீர்செல்வம்.

- பின்னர் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கூவாத்தூரில் பல கூத்துக்கள் நடைபெற்றன.

- இந்த நிலையில் முதல்வர் கனவில் இருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

பிப்.15: கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த தினகரன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அதிமுக துணைப் பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்தார்.

பிப்.16: எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தார் தினகரன்.

மார்ச் 15: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் 22: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து அதிமுகவில் அதிமுக (அம்மா) கட்சி,  அதிமுக (ஜெயலலிதா) கட்சி என இரு அணிகள் பிரிக்கப்பட்டு தனித்தனியான சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

மார்ச் 23: தொப்பியுடன் அதிமுக அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகரில் களமிறங்கினார் தினகரன்.

ஏப். 07: தொப்பி சின்னத்தில் களமிறங்கிய டிடிவி தினகரன், தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க, இடைத்தேர்தலுக்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை, அனைத்தையும் புரட்டிப் போட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

- விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியது.

ஏப். 9: நள்ளிரவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஏப். 16: ரூ.1.30 கோடியுடன் தில்லியில் ஹோட்டல் ஒன்றில் சுகேஷ் சந்திரன் என்பவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர டிடிவி தினகரனுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாகவும் இதற்காக தினகரனிடமிருந்து ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் சுகேஷ் கூறியதை அடுத்து தில்லி குற்றவியல் பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஏப். 17: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த தில்லி குற்றவியல் போலீஸார், விசாரணைக்கு வருமாறு சென்னைக்கு வந்து நேரிலேயே சம்மன் அளித்தனர்.

ஏப். 18: தினகரனை அதிமுகவிலிருந்து விலக்கிவைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

ஏப். 19: இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பொருட்டு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கான ஆயத்தங்களும் தொடங்க, அதிமுகவில் இருந்தும், கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதாக டிடிவி.தினகரன் அறிவித்தார்.

ஏப். 22: தில்லி குற்றவியல் போலீஸார் முன்பு நேரில் ஆஜரானார். தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சுகேஷ் சந்திரன் யாரென தெரியாது என்றார்.

ஏப். 23: 2வது நாள் நடைபெற்ற 9 மணி நேரம் விசாரணையில் சுகேஷ் சந்திரனை தெரியும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி நினைத்தேன் என்றும் ஒத்துக்கொண்டார். .

ஏப். 24: 3வது நாள் நடைபெற்ற 13 மணி நேரம் விசாரணையில் அனைத்து கேள்விக்கும் ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

ஏப். 25: 4-வது நாள் நடைபெற்ற 7 மணி நேரம் விசாரணையில் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அடுக்கினர் தில்லி போலீஸார். இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

தினகரனுடன் அவரது கூட்டாளியாகச் செயல்பட்ட மல்லிகார்ஜுனாவையும் கைது செய்த போலீஸார், இருவரையும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருவார்கள் என்று தெரிகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினகரன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமினில் வெளிவர முடியாத 4 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் தினகரனுக்கு சிறை தண்டனை உறுதியாக கிடைப்பதுடன், அதிகபட்ச சிறைதண்டனை கிடைக்கும் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தினகரன் நள்ளிரவு கைது வரை நடந்த நள்ளிரவு சம்பவங்களால் அதிமுக ஆட்டம் கண்டுள்ளது. சரியாக 70 நாட்களுக்குள் தினகரன் அரசியல் வாழ்க்கைக்கு முடிக்கு வந்ததையடுத்து சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் விரட்டியடிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் படங்கள், பேனர்கள் அதிரடியாக கழட்டி வீசப்பட்டுள்ளன.  

இதையடுத்து இனி மன்னார்குடி குடும்பலின் தலையீடு இல்லாமல் அதிமுக சுதந்திரமாக செயல்படும் என்றும் அதிமுகவின் கடிவாளம் பன்னீர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு அணிகளின் கையில் மட்டுமே இருக்கும் என பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com