மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

நெடுஞ்சாலைகளை நகர்ப்புற சாலைகளாகப் பெயர் மாற்றினாலும் கூட அந்த சாலைகளில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுபானக் கடைகளைத் திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ கூடாது
மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

நெடுஞ்சாலைகளை நகர்ப்புற சாலைகளாகப் பெயர் மாற்றினாலும் கூட அந்த சாலைகளில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுபானக் கடைகளைத் திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளை நகர்ப்புற சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைத் திறக்கத் தடை செய்ய வேண்டும் என்று கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சமூக நீதிக்கான வழக்குரைஞர் பேரவைத் தலைவர் கே.பாலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனு விவரம்: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 3,300 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மூடிய மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு வசதியாக நெடுஞ்சாலைகளை நகர்ப்புற சாலைகளாக மாற்ற அவசரத் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நகராட்சி நிர்வாக ஆணையர் ஓர் அறிவிப்பை அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளார்.
எந்த உள்ளாட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இப்போது கிடையாது. தனி அலுவலர்கள்தான் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வருகின்றனர். அவர்கள் தன்னிச்சையாகத் தீர்மானம் போட முடியாது.
மதுக்கடைகளைத் திறப்பதற்காக இவ்வாறு நகர்ப்புற சாலைகளாக மாற்றுவது சட்ட விரோதமானது. மேலும், நகராட்சி நிர்வாக ஆணையரின் அறிவிப்பானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இம்மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவில் உள்ள கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அவர்களது தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, சாலைகளுக்கு பெயர் மாற்ற முயற்சித்த பஞ்சாப் மாநில அரசின் முயற்சியை, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, 'மாநில நெடுஞ்சாலைகள் நகர்ப்புற சாலைகளாக பெயர் மாற்றப்பட்ட பிறகு, மூடப்பட்ட மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்குமா' என்று அரசு தலைமை வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நிர்வாகத் தேவைகளைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று கூறிய நீதிபதிகள், தற்போது உள்ள மாநில, தேசிய நெடுஞ்சாலைகளைப் பெயர் மாற்றி அவற்றின் அருகே புதிதாக மதுபானக் கடைகளைத் திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மூன்று மாதங்களுக்கு இடைக்காலத் தடை அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com