இணக்கமான சூழலால் பேச்சுவார்த்தை தொடங்கும்

இரு அணிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பேச்சுவார்த்தை தொடங்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்
இணக்கமான சூழலால் பேச்சுவார்த்தை தொடங்கும்

இரு அணிகளுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பேச்சுவார்த்தை தொடங்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை அகற்றியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இரு அணியிருக்கும் இடையே பேச்சுவார்த்தை இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று நாங்கள் எதுவும் கூறவில்லை. ஊடகங்கள்தான் கூறுகின்றன.
ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை நிவர்த்தி செய்த பிறகு இருவரும் பேசும்போது ஓர் இணக்கம் ஏற்படும். அதற்காகத்தான் வேண்டுகோள் வைக்கிறோம். அதை அவர்களும் ஓரளவு ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.
இதில் ஒரு முடிவு வரும்போது நிச்சயம் இணக்கமான ஒரு சூழல் ஏற்படும். அப்போது பேச்சுவார்த்தை நடைபெறும்.
எங்கள் அணியின் எண்ணங்கள் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். அவற்றை நிறைவேற்றக்கூடியவர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர். நாங்கள் கூறுவதை நிறைவேற்றக்கூடாது என்று நினைப்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அப்படி இருப்பவர்களைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதன் அடையாளம்தான் சசிகலா பேனர் அகற்றமாகும்.
அண்ணன்-தம்பிகள்தான்: அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தை விலக்கிவிட்டால், நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகள்தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை களையும் போது நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. அதிமுகவைப் கைப்பற்றுவதற்காக தினகரன் குறுக்கு வழியில் பெரிய தவறைச் செய்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இதுபோன்ற அசாதாரண சூழல் வந்தபோதுகூட யாரும் இதுபோன்ற தவறைச் செய்யவில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யும். தர்மம் நிச்சயம் வெல்லும் என்றார்.
ரகசிய பேச்சுவார்த்தை: அதிமுகவின் இணைப்பு தொடர்பாக இரு அணிகளும் நேராகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் வைத்தியலிங்கம், செங்கோட்டையனும், ஓபிஎஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com