'தமிழிசையின் கனவு பலிக்காது': துரைமுருகன்

தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற வைக்க நினைக்கும் தமிழிசையின் கனவு பலிக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
'தமிழிசையின் கனவு பலிக்காது': துரைமுருகன்

தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற வைக்க நினைக்கும் தமிழிசையின் கனவு பலிக்காது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்காக திமுக நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை சகித்துக் கொள்ள முடியாத பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக மீது உதவாத வாதங்களை முன் வைக்கிறார்.
காவிரி நீர்ப் பிரச்னைக்கு திமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, காவிரி இறுதித் தீர்ப்பை பெற்றது, அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட போராடியது எல்லாம் திமுகதான்.
பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் கருணாநிதி வலியுறுத்தியதால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது என்பதைக்கூட தமிழிசை மறந்துவிட்டது வேடிக்கையாக உள்ளது.
ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு நாள்களில் அமையுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இப்படி, தமிழக விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டு விவசாயிகளை திமுக வஞ்சித்து விட்டதாக கூசாமல் பொய் சொல்லலாமா?
தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மாநில பாஜகவால் மத்திய அரசிடமிருந்து ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை? தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெற்றுத் தர மனமில்லை. தில்லியில் போராடிய விவசாயிகளை மாநில தலைவர் என்ற முறையில் சென்று சந்தித்து அவர்களை பிரதமரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏன் வழி காண முடியவில்லை.
இது எதையும் செய்யாமல், ஏதோ அறிக்கை அரசியல் மட்டும் நடத்தி, தமிழகத்தில் பாஜகவைக் காலூன்ற வைத்து விடலாம் என்று தமிழிசை தப்புக் கணக்கு போட்டால் அது பகல் கனவாகவே முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com