வல்லூரில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்: பற்றாக்குறை ஏற்படாது என மின் வாரியம் விளக்கம்

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தேவைக்கு அதிகமாக உள்ளதால், வல்லூரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் மின் பற்றாக்குறை ஏற்படாது

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தேவைக்கு அதிகமாக உள்ளதால், வல்லூரில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் மின் பற்றாக்குறை ஏற்படாது என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அருகே தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் இணைந்து நாள் ஒன்றுக்கு 3 யூனிட்டுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3-ஆம் அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 1000 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை மின்விநியோகம் செய்யப்பட்டதற்கான தொகை ரூ.1,156 கோடியை தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 1,000 மெகாவாட் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மின் வாரியம் விளக்கம்: இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் யூனிட் ரூ.5.25-க்கு பெறப்படுகிறது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி கட்டணத்தை 60 நாள்கள் வரை வட்டியின்றி செலுத்தலாம். அதன் பின்னர் வட்டியுடன் செலுத்த வேண்டும். வல்லூரிலிருந்து பெறப்படும் மின்சாரத்துக்காக மாதந்தோறும் சுமார் ரூ.250 கோடியை, தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தி வருகிறது. தற்போது 60 நாள்களுக்கு மேற்பட்ட நிலுவைத் தொகை ரூ.502 கோடி உள்ளது. அதில் தற்போது ரூ.200 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ.3.10 ஆக உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி தற்போது 2 ஆயிரம் மெகாவாட் அளவில் அதிகரித்துள்ளது. பிற அனல் மின்நிலையங்களிலும் மின் உற்பத்தி முழுமையாக உள்ளது. தனியார் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சாரம் வெளி சந்தையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.92 முதல் ரூ3.95 வரை கிடைக்கிறது.
குறைந்த விலையில் தேவைக்கு அதிகமான மின்சாரம் கிடைப்பதால், தற்போது வல்லூர் மின்நிலையத்திலிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்ய தேவையில்லை.
எனவே, வல்லூரில் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் நுகர்வோர் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி உள்ளதால், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com