இன்று அட்சய திருதியை: நகை முன்பதிவு தொடங்கியது; விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

அட்சய திருதியை நாள்களை (வெள்ளி, சனிக்கிழமை) முன்னிட்டு, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நகைக் கடைகளில் தங்கம் வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது
இன்று அட்சய திருதியை: நகை முன்பதிவு தொடங்கியது; விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

அட்சய திருதியை நாள்களை (வெள்ளி, சனிக்கிழமை) முன்னிட்டு, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நகைக் கடைகளில் தங்கம் வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்கினால், அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பது மக்களிடையே நம்பிக்கையாக உள்ளது. இதனால், அந்த நாளில் ஒரு கிராம் நகையாவது வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.
ஏற்பாடுகள் தயார்: நிகழாண்டு அட்சய திருதியை நாள்களில் (ஏப்.28, ஏப்.29) நகைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையான நகைகளை அளிக்கச் சிறிய நகைக் கடைகள் முதல் பெரிய நகைக் கடைகள் வரை எல்லா கடைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் நகைக்கடைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புதிய டிசைன்கள்: நகைக் கடைகளில் பலவிதமான புதிய டிசைன்கள் வந்துள்ளன. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பல விதமான நகைகள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் புதிய வடிவமைப்பில் பல்வேறு நகைகள் வந்துள்ளன. சராசரியாக 3,000 முதல் 4,000 டிசைன்கள் உள்ளன. இவற்றில், 1000-க்கும் மேலான புதிய டிசைன்கள் அடங்கும். அட்சய திருதியை நாளில் நகை வாங்க வருவாரை இந்தப் புதிய டிசைன் நகைகள் நிச்சயம் கவரும் என்று நகை வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்பதிவு தொடக்கம்: அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நகைகளைத் தேர்வு செய்து வாங்குவது சிரமம். இதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தொகையை செலுத்தி, அட்சய திருதியை நாளில் நகைகளை வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழுத் தொகையோ அல்லது 50 சதவீத தொகையை முன்னதாகச் செலுத்தி, அட்சய திருதியை நாள்களில் ரசீதைக் கொடுத்து, நகையை வாங்கிச் செல்ல முடியும். இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்க்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
20 சதவீதம் அதிகரிக்கும்: தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் நகைக் கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 7,000 நகைக் கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நகைகள் வாங்குவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் 2,000 கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டும் தங்க விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியது:
2016 -ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்தது. நிகழாண்டிலும் 20 சதவீத விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தங்கத்தின் விலை குறைவு முக்கிய காரணம்.
கடந்த ஆண்டு அட்சயத் திருதியை நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,850 ஆகவும், ஒரு பவுன் ரூ.22,800 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை ஒரு கிராம் ரூ.2,769 ஆகவும், ஒரு பவுன் ரூ.22,152 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டைவிட தற்போது ஒரு பவுனுக்கு ரூ.648 குறைந்துள்ளது.
அட்சய திருதியை நாளில் மட்டும் 3 மடங்கு முதல் 4 மடங்கு வரை விற்பனை அதிகரிக்கும். தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய சரியான தருணம் என்று மக்கள் நம்புகிறார்கள். அட்சய திருதியை நாள்களில் நகைக் கடைகளுக்கு மொத்தம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றார் எஸ்.சாந்தக்குமார்.
பாதுகாப்பு ஏற்பாடு: அட்சய திருதியை நாட்களான வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை நகைக் கடைகளில் தங்கம் விற்பனை நடைபெறும். இந்த நாட்களில் நகைக் கடைகளுக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் அளிப்பார்கள் என்று தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com