ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சு நடத்தத் தயார்: அமைச்சர்கள் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என்று தமிழக அமைச்சர்கள் அறிவித்தனர். மேலும், நல்லதே நடக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என்று தமிழக அமைச்சர்கள் அறிவித்தனர். மேலும், நல்லதே நடக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான கூட்டம் மூன்றாவது நாளாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான அறிவுரைகளை வழங்கினோம். மே தின பொதுக்கூட்டத்தை மிகுந்த எழுச்சியுடன் நடத்தவும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் கொண்டாடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார் என்றார்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: இரு அணிகள் இணைப்பு பற்றி எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இன்றுகூட பேச்சு நடத்த நாங்கள் தயார்தான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எனவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நல்லது நடக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அப்போது தெரிவித்தார்.
ஏற்கனவே இரு அணிகளை சேர்ந்த குழுக்களில் சிலர் தனியாக சந்தித்துப் பேசி இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இருதரப்பிலும் பேசி முடிவு வெளியிடப்படும் என்றார் ஜெயக்குமார்.
பேச்சுவார்த்தை நடத்த என்ன தயக்கம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் இப்போதே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.
முன்னதாக, அணிகள் இணைப்பு தொடர்பாக மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை எனவும், குழுவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கருத்துகளைத் தெரிவிப்பார் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் துறை ரீதியான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் கே. ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாய்-தந்தை இல்லாத இயக்கமாக இந்த அதிமுக இயக்கம் உள்ளது. இரண்டு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் மக்களும், தொண்டர்களும் நினைக்கிறார்கள். எனவே இரண்டு அணிகளும் ஒன்றுபடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com