பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை: போராட்டத்தை தொடரும் அரசு மருத்துவர்கள்

முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வகையில் வெளியான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராடி வருகின்றனர். 9-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளோடு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக அரசும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவே உள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தமிழகத்தின் உரிமைகளை மீட்போம். எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது
தொடர் போராட்டம்: இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியது: இடஒதுக்கீட்டுக்காக அவசரச் சட்டம் இயற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அவசரச் சட்டத்துக்கு எவ்வித உத்தரவாதமும் அரசு தரப்பில் இருந்து தரப்படவில்லை. எனவே, கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அறவழியில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
மருத்துவர்கள் கைது: இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் 375 அரசு மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
உண்ணாவிரதம்: சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனர். டிஎம்எஸ் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் 9-ஆவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com