வறட்சி கால மானிய விலைத் தீவனம்: விவசாயிகளின் கைகளை எட்டுவதில் உள்ள சிக்கல் தீர்க்கப்படுமா?

வறட்சி பாதிப்பிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மானிய விலைத் தீவனத்தை அதிகப்படுத்துவதுடன்
வறட்சி கால மானிய விலைத் தீவனம்: விவசாயிகளின் கைகளை எட்டுவதில் உள்ள சிக்கல் தீர்க்கப்படுமா?

வறட்சி பாதிப்பிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மானிய விலைத் தீவனத்தை அதிகப்படுத்துவதுடன், அவை விவசாயிகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பருவ மழை பொய்த்த காரணத்தால் தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் பிரதான மாவட்டங்களான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளில், நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மிகக் குறைவான மழை பொழிந்துள்ளது. இதன் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது.

நீர் நிலைகள் வறண்டு விவசாயம் பொய்த்துப்போய் வறட்சி நிவாரணத்தை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், குறு, சிறு விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது.வறட்சியால் உணவுப் பயிர், தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டு கால்நடைகளுக்கான தீவனத்தை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசால் கடந்த மார்ச் தொடக்கத்திலிருந்து வைக்கோல் தீவனம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தனியாரிடமிருந்து ரூ. 10 முதல் ரூ. 12-க்கும் கிலோ வைக்கோல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 2 அளவில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கால்நடை வளர்ப்போருக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. விவசாயிகளின் கைகளுக்குத் தீவனம் கிடைப்பதில் பெரும் அலைச்சல், பொருளாதாரச் சிக்கல் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை அறுவடை செய்யுமா அரசு? இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி கூறியதாவது: நாள் ஒன்றுக்கு மாட்டுக்கு 10 கிலோ வைக்கோலும், கன்றுக் குட்டிக்கு 5 கிலோ வைக்கோலும் தேவைப்படுகிறது. ஆனால், அரசு வழங்குவதோ 105 கிலோ. இதை வைத்து என்ன செய்வது?

ஒரு மாடு அல்லது எருமைக்கு 21 கிலோ என்ற அடிப்படையில், ஒரு விவசாயிக்கு மொத்தமாக 105 கிலோ வழங்கப்படுகிறது. இதற்காக நாங்கள் ரூ. 210 கட்டணமாகச் செலுத்துகிறோம். ஆனால், வழங்கப்படும் தீவனம் போதியதாக இல்லை. ஒருமுறை கிடைத்தவருக்கு மறுமுறை தீவனம் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. மூன்று கட்டுகளாக வழங்கப்படும் தீவனத்தில், ஒரு கட்டுக்கு சரியாக 35 கிலோ இருப்பதில்லை. 22 கிலோ என்ற அளவில் உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், வருவதே அப்படித்தான் உள்ளது என்கின்றனர். எனவே, வழங்கப்படும் தீவன அளவை 300 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக 20 இடங்களில் தீவனம் வழங்கும் மையம் அமைக்கப்படும் என்று கூறி, 10 இடங்களில் மட்டுமே அமைத்துள்ளனர். இதனால், கிராமங்களில் உள்ள விவசாயிகள் மானிய விலையில் கிடைக்கும் தீவனத்தைப் பெற தனியாக வண்டி வாடகைக்குப் பிடிக்க வேண்டியுள்ளது என்றார்.

இதுகுறித்து பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்த குறு விவசாயி ஆறுச்சாமி கூறியதாவது: கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை 10 மையங்கள் மூலமாகத் தீவனம் வழங்கப்படுகிறது. இதில், பொள்ளாச்சியில் ராமநாதபுரம் பகுதியில் வழங்கப்படுகிறது.

எனது கிராமத்திலிருந்து 26 கி.மீ. தூரம் பயணம் செய்து தீவனம் பெற்று வர வேண்டும். அரசு வழங்கும் தீவனத்தின் மதிப்பு ரூ. 800 என்றால் அதே நிகருக்கு வாகன வாடகை, பிற செலவுகள் வந்து விடுகின்றன. கேரள எல்லையான பிச்சனூரில் குடியிருக்கும் விவசாயி 30 கி.மீ. தூரம் சென்று கஞ்சிக்கோணம்பாளையத்தில் தீவனம் பெற வேண்டியுள்ளது. தீவனத்தின் மதிப்பை விட கூடுதலாக செலவு செய்ய நேரிடுகிறது.

இதே நிலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவுகிறது. எனவே, அரசு உடனடியாக இதைப் பரவலாக கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கால்நடை மருந்தகங்கள் மூலமாக இல்லாவிடிலும், 6 கி.மீ. தூரத்துக்குள் தீவனம் கிடைக்க செய்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.

பற்றாக்குறை: இத்திட்டத்தில், தீவனப் பற்றாக்குறை நிலவுவதால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தீவனம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூலூரைச் சேர்ந்த கே.வேலுசாமி என்ற விவசாயி தீவனத்துக்கு முன்பதிவு செய்ய சென்றுள்ளார். வெங்கட்டாபுரம் மையத்தில் அவருக்கு 1,117-ஆவது எண் வழங்கப்பட்டு, ஒரு மாதம் கழித்து தீவனம் பெற வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். தீவனம் கைக்கு கிடைக்க தாமதம் ஆகும் என்பதால் அவற்றை விற்க வேலுசாமி முடிவு செய்துள்ளார்.

ஒப்பந்ததாரர்கள் காரணமா?கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை மூன்று ஒப்பந்ததாரர்கள் மூலமாகத் தீவன விநியோகம் நடைபெற்று வருகிறது. இதில், ஒரு ஒப்பந்ததாரர் மட்டும் 6 மையங்களை எடுத்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் தங்களது போக்குவரத்து செலவைக் குறைக்க, அதிக மையங்களுக்குத் தீவன விநியோகம் செய்ய இயலாது என்று தெரிவித்த காரணத்தாலேயே விநியோக மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறியதாவது: மாவட்டத்தில் 20 மையங்கள் அமைப்பதாகவே தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. பிறகு, அது 10 மையங்களாக குறைக்கப்பட்டது. இது அரசு எடுத்த முடிவாகும். இதற்கான காரணங்கள் தெரியவில்லை. இப்பிரச்னைக்கு அரசுதான் தீர்வு காண முடியும்.

ஒரு மையத்துக்கு ரூ. 18 லட்சத்து 27 ஆயிரம் வீதம், பத்து மையங்களுக்கு ரூ. 1 கோடியே 82 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கிலோவுக்கு ரூ. 2 பணமும் தீவனம் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது. தவிர, இதில் அடுத்தகட்ட விநியோகத்துக்கான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதுவரை 580 டன் அளவுக்கு மேல் வைக்கோல் தீவனம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பற்றாக்குறை நிலவுவது உண்மைதான். ஒரே ஒப்பந்ததாரர் பல இடங்களுக்கு விநியோகம் செய்வதால் தாமதம் ஏற்படுகிறது. தமிழகத்தில் வறட்சி என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து வைக்கோல் வாங்கி விநியோகம் செய்யப்படுகிறது.

பற்றாக்குறை பிரச்னையைப் போக்கவே ஹைட்ரோபோனிக் முறையில் அசோலா, மக்காச்சோள தீவன உற்பத்தி விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com