வறட்சியால் தற்கொலை இல்லையா... விவசாயிகள் சாவை கொச்சைப்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

விவசாயிகளின் மரணத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தியது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வறட்சியால் தற்கொலை இல்லையா... விவசாயிகள் சாவை கொச்சைப்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

விவசாயிகளின் மரணத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தியது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் விவசாயிகள் எவரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், முதுமை, உடல்நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் மரணத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தியிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தான் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ‘‘தமிழகத்தில் 82 விவசாயிகள் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் உயிரிழப்புக்கும், வறட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகவல் கலப்படமற்ற பொய்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் கடைமடைப்பாசனப் பகுதிகளுக்கு சென்று சேரவில்லை. அதுமட்டுமின்றி சம்பா சாகுபடிக்காக பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், நவம்பர் மாதத்திலேயே மேட்டூர் அணை மூடப்பட்டதால் நெற்பயிர்கள் மட்டுமின்றி, மற்ற பயிர்களும் கருகி விட்டன. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பல உழவர்கள் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால், கடனை எப்படி அடைக்கப்போகிறோம்? என்ற கவலையில் பல உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல இடங்களில் பயிர்க்கடனைக் கட்டும்படி வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாலும், அவமானப்படுத்தியதாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்குகளில் தற்கொலைக்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர மேலும் பல ஆதாரங்களும் உள்ளன. 

வேறு பல இடங்களில்  நூற்றுக்கணக்கான அடி ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்காததால் மனமுடைந்த உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 400&க்கும் அதிகமான விவசாயிகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் உழவர்கள் உயிரிழப்புக்கும், தற்கொலைகளுக்கும் வறட்சி காரணமல்ல என்று கூறியிருப்பதன்  மூலம் விவசாயிகளுக்கு தமிழக அரசு மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறது. வட இந்தியாவில் உழவர்கள் தற்கொலை செய்து கொண்ட போது, அதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய வேளாண்துறை அமைச்சர்  ராதாமோகன்சிங், குடும்பப்பிரச்னை, காதல் தோல்வி தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் என்று கூறி கொச்சைப்படுத்தினார். இப்போது தமிழக அரசும் அதேபோல் கூறி விவசாயிகளின் உயிரிழப்பை கொச்சைப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசின் இந்த செயலை மன்னிக்கவே முடியாது.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை கடந்த 13.04.2017 அன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,‘‘தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை தொடர்பான துயரங்கள் உணர்வுள்ள ஆன்மாவின் மனசாட்சியை உலுக்கிப் பார்க்கும் சக்தி கொண்டவை. வறட்சி, கடன் தொல்லை மற்றும் வேறு சில காரணங்களால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் காவலன் தமிழக அரசு தான் என்ற முறையில் அவர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது அதை பேரிடராக கருதி நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அதை செய்யாமல் அமைதியாக இருப்பது பிரச்னைகளுக்கு தீர்வு அல்ல’’ என்று கூறியது.

ஆனால், உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையில் இப்போது இப்படி ஒரு பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; அவர்கள் பணத்தை கந்து வட்டிக்கு கொடுத்து லாபம் பார்க்கிறார்கள் என்று கூறிய புத்திசாலிகளை அமைச்சர்களாகக் கொண்ட இந்த அதிமுக பினாமி அரசிடம் இதைத் தவிர வேறு நல்ல செயல்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் உயிரிழப்புகளை கொச்சைப்படுத்தும் வகையிலான பதில்மனுவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற்று, உண்மை நிலையை விளக்கும் புதிய மனுவை  தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சமாக தலா ரூ.10 லட்சத்தை நிவாரண உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com