அதிகாரி இடமாற்றத்தில் உள்நோக்கம் இல்லை: கீழடியில் அடுத்த கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சர்

கீழடியில் பணியில் இருந்த தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்ததில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அடுத்த கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா
கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்கள் குறித்து மதுரையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன்,
கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்கள் குறித்து மதுரையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன்,

கீழடியில் பணியில் இருந்த தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்ததில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும், அடுத்த கட்ட ஆய்வு விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தை மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்ட அவர்கள், அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு மிகவும் மதிப்பளிக்கிறார். தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுப் பணிகளைத் தொடருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுவது தவறானது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தாமதமானதால், மூன்றாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, மூன்றாம் கட்டப் பணிகளுக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகழாய்வைத் தொடர்ந்து நடத்துவதே மத்திய அரசின் நோக்கம்.
போதுமான தொல்லியல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கீழடியிலேயே நிச்சயமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இடமாற்றம் வழக்கமானது:
தொல்லியல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். கீழடியில் பணியாற்றிய அதிகாரி உள்பட 26 தொல்லியல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தொல்லியல் அதிகாரி இடமாற்றம் குறித்து சிலர் வீண் வதந்திகளைப் பரப்ப முயற்சிக்கின்றனர். இது அபத்தமான செயல் என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தொல்லியல் துறைக்கு என சில விதிகள் உள்ளன. அதன்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதிகாரிகள் இடமாற்றம் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே. தமிழின் தொன்மையைக் காப்பதில் திராவிடக் கட்சிகளுக்கு பாஜக சளைத்தது அல்ல என்றார்.
மத்திய தொல்லியல் துறை இயக்குநர் ராகேஷ் திவாரி பேசுகையில், கீழடியில் உள்ள விவசாயிகள் தொல்லியல் பணிகளுக்கு நிலம் அளித்து நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்டுள்ள பொருள்களை சிவகங்கை மற்றும் சென்னையில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்படும். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க பரிசீலிக்கப்படும்.
இது, முழுக்க முழுக்க ஆய்வு சம்பந்தப்பட்ட விஷயம். இதில், தனிநபர் தலையீடு முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கீழடியில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் அடுத்த சில நாள்களுக்குள் தொடங்கப்படும் என்றார்.
தள்ளுமுள்ளு: முன்னதாக ஆய்வுப் பணிகள் நடைபெற்ற இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வுகளின் அறிக்கைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர். இந்நிலையில், அமைச்சர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து அங்கிருந்த கல் மற்றும் கட்டைகளைக் கொண்டு மக்கள் விடுதலைக் கட்சியினரைத் தாக்க முயன்றனர்.
இதை தடுக்க முயன்ற போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது சிலர் கல் வீசியதில் போலீஸார் வாகனமும், மேலும் சில வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

மத்திய அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலைக் கட்சியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜகவினரைத் தடுத்து நிறுத்தும் போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com