கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; விரைவில் தொண்டர்களுடன் சந்திப்பார்: டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது பிறந்தநாளன்று தொண்டர்களை
கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்; விரைவில் தொண்டர்களுடன் சந்திப்பார்: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது பிறந்தநாளன்று தொண்டர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், வீடு திரும்பிய அவர், மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவர் தொலைகாட்சி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர், சில தினங்களில் வீடு திரும்பிய அவரது உடல்நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. எனினும், தீவிர அரசியலில் அவர் ஈடுபடாமலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி முன்பு போல் செயல்படும் நிலையில் இருந்தால், தமிழக அரசியலின் இன்றைய சூழ்நிலையே வேறு விதமாக இருந்திருக்கும் என பேசப்பட்டு வந்தது. அத்தகைய சூழலில், திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது பிறந்தநாளான வருகிற ஜூன் மாதம் 3-ஆம் தேதி, தொண்டர்களை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த வைர விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளன்றே இந்த வைர விழா கொண்டாடப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com