கொடநாடு கொலை வழக்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சும்
கொடநாடு கொலை வழக்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சும் அளவுக்கு சென்றுள்ளது. இந்த வழக்குகள் விசாரணையை உள்துறை செயலர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர் கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஓய்வு எடுக்கவும், தற்காலிக முதல்வர் அலுவலகமாகவும் பயன்படுத்திய கொடநாடு எஸ்டேட்டில் உள்ள காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அவருடன் இன்னொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்ததும் இன்னொரு “புதிய மர்மமாக” உருவாகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து காவலாளி ஏன் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் திரைப்படங்களில் வரும் த்ரில்லர் காட்சிகளையும் மிஞ்சி விடுவது போல் அமைந்திருக்கிறது.

எதற்காக காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்? அங்கு கொள்ளையடிக்கப்பட்டது போலீஸார் கூறுவது போல் கைக்கடிகாரங்கள் மட்டும்தானா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி என்றால், அவர் எப்படி திடீர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்? அதேநேரத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்ததாக கூறப்படும் சயன் என்ற கூட்டாளியும் எப்படி விபத்தில் சிக்கினார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை காவல்துறை சரியான விளக்கத்தை கூறிட முன்வரவில்லை.

கொடநாட்டில் கொள்ளையடிக்க முயன்றது ஏதோ வெறும் கைக்கடிகாரங்களுக்காக என்று போலீஸார் கூறுவதை நம்புவதற்கு இடமில்லை. கைக்கடிகாரத்தை எடுக்க வந்தவர்கள் ஏன் காவலாளியை கொல்லவேண்டும்? அதே கொள்ளையில் எடுத்துச்சென்ற பளிங்கு கற்களை பத்திரமாக வைத்திருந்த கொள்ளையர்கள் ஏன் கைக்கடிகாரங்களை தூக்கி ஆற்றில் வீசினார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர்களாக இருக்கின்றன.

இந்த காவலாளி கொலையை ஏதோ கைக்கடிகாரத்திற்காக நடந்த கொலை போல் திசை திருப்புவதில் வேறு உள்நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஓரே நேரத்தில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் சந்தேகப்படுவதாக தேடப்படும் இருவர் விபத்தில்- அதிலும் குறிப்பாக வெவ்வேறு இடத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கியிருப்பது சாதாரண நிகழ்வு போல் தெரியவில்லை. ஒரே சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவர் வெவ்வேறு இடங்களில் விபத்துக்களில் சிக்கினார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தற்போதையை முதல்வருக்கு நெருங்கிய உறவினர் என்று வெளிவந்துள்ள செய்திகளையும் புறந்தள்ளிவிட முடியாது. அதே போல் கனகராஜின் சகோதரர் தனபால், “சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தேன். அங்கு விபத்து நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கனகராஜ் திட்டமிட்டு சாகடிக்கப்பட்டது போல் தெரிகிறது” என்று இன்று தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி “கொடநாடு” விவகாரத்தில் மேலும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் ஏராளம் இருக்கின்றன என்பதை உறுதி செய்கிறது.

கொள்ளையடிக்கப்பட்டது கைக்கடிகாரம் மட்டும்தான் என்பதை விட, கொடநாட்டில் கொள்ளை போனது கரன்சி நோட்டுக்களா, சொத்து ஆவணங்களா அல்லது விலை மதிக்க முடியாத பொருட்களா என்பது பற்றியெல்லாம் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, கொடநாடு காவலாளி கொலை, கைக்கடிகாரக் கொள்ளை, ஜெயலலிதா அவர்களின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளி சயன் விபத்து ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக இணைத்து விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு மர்ம முடிச்சுகளும் கவனமாக அவிழ்க்கப்பட வேண்டிய வழக்கு. அந்த விசாரணையை உள்ளூரில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது வெளிப்படையான விசாரணைக்கு வித்திடும் என்று நம்புவதற்கு இடமில்லை.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு விசாரணையை உடனடியாக ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள நேர்மையான போஸீஸ் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்து, அந்த விசாரணையை மாநில உள்துறை செயலாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொடநாடு கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்ற உண்மைத் தகவல்களை வெளிப்படையாக அறிவித்து, சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் யாரேனும் “மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி விடாமல்” தடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com