சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மே 1 -இல் ஊதியத்துடன் விடுமுறை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயம்பேடு சந்தையிலுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையிலுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சுமை ஏற்றுவோர், இறக்குவோர் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்.வடிவேலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தேசிய பண்டிகை விடுமுறைகள் சட்டம், 1958-இன் படி, மே 1 -ஆம் தேதி நாடு முழுவதும் பொது விடுமுறை தினமாகும். இருப்பினும், மே தினத்தன்றும் கோயம்பேடு சந்தையில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். அதில், 'தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி மே 1 -ஆம் தேதி ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதமும், இதே கோரிக்கை அடங்கிய மனுவை தொழிலாளர் நலத் துறை ஆணையரிடம் வழங்கினோம். இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், கோயம்பேடு சந்தையை நிர்வகிக்கும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு உரிய உத்தரவை தொழிலாளர் நலத் துறை பிறப்பித்துள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், சங்கங்களும் இதுநாள் வரை மே 1 -ஆம் தேதி ஊதியத்துடன்கூடிய விடுமுறை குறித்த அறிவிப்பை தெரியப்படுத்தவில்லை. எனவே, தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கோயம்பேடு சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்கு, மே 1 -ஆம் தேதி ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்குமாறு வியாபாரிகள் சங்கங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com