தன்னம்பிக்கையுடன் தளராமல் செயல்பட்டால் வாழ்வில் உயரலாம்! தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

மாணவர்கள் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு முயற்சி, தன்னம்பிக்கையுடன் தளராமல் செயல்பட்டால், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி

மாணவர்கள் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு முயற்சி, தன்னம்பிக்கையுடன் தளராமல் செயல்பட்டால், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ வாசவி கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.சுதாகர் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார்.
தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர்நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
தந்தை பெரியார், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆகியோர் பிறந்த மண் ஈரோடு மாவட்டம். கொங்கு மண்டலத்தின் மையப் புள்ளியான ஈரோட்டில் சீரிய முறையில் கல்வித் தொண்டாற்றி வரும் ஸ்ரீ வாசவி கல்லூரி, பொன்விழா கொண்டாடுவதில் முன்னாள் மாணவர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, முன்னேற்றம், அமைதி, ஆக்கப் பண்பு ஆகியவை அந்த சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள கல்விமுறையைச் சார்ந்து அமைகின்றன. சமுதாய முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் ஆற்றலையும் வழிமுறைகளையும் தோற்றுவிக்கும் இடம் கல்வி நிறுவனங்கள்தான்.
கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்- மாணவர் புரிந்துணர்வு ஆரோக்கியமாக இருந்தால்தான் அங்கே கற்றலும் கற்பித்தலும் தடையில்லாமல் நடைபெறும். அதுபோன்றே பெற்றோர்- ஆசிரியர் உறவும் மிக அவசியம்.
தங்கள் குழந்தைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்து விடுவதோடு பெற்றோரின் கடமை முடிவதில்லை. பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் ஊடகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் பெருகிவிட்ட காலத்தில், அவர்கள் தவறான வழிக்குச் செல்லாத வகையில், ஆசிரியர்களோடு பெற்றோரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
வேலைவாய்ப்புப் போட்டிகள் உலக அரங்கத்திற்கு வந்துவிட்ட நிலையில் திறமையும், அறிவுக் கூர்மையும், செயல்பாடுகளில் விவேகமும் உள்ள இளைஞர்களால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். உலகத் தரத்திலான திறனை வளர்த்துக் கொள்வதற்கு இளைஞர்களிடையே ஆர்வமும், கடுமையான உழைப்பும் தேவைப்படுகின்றன. மாணவர்கள் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு முயற்சி, தன்னம்பிக்கையுடன் தளராமல் செயல்பட்டால், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்.
தமிழகத்தில் ஏழை மாணவ, மாணவியரும் உயர்கல்வி பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களைச் செயல்படுத்தினார். அதனால் இந்தியாவில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் 24.50 எனும் அளவில் உள்ளபோது, தமிழகத்தின் மொத்த சேர்க்கை விகிதம் 44.30 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு கல்லூரிகள் உள்ளன. பெண்கள் அதிக அளவு பட்டம் பெற்ற மாநிலமும் தமிழகம்தான் என்றார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கே.பரமேஸ்வரி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கல்லூரி முதல்வர் என்.ஜெயகுமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com