இணைப்புக் கதவுகள் மூடப்படவில்லை: அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவில் இணைப்புக் கதவுகள் மூடப்படவில்லை என அமைச்சர் ஜெயகுமார் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இணைப்புக் கதவுகள் மூடப்படவில்லை: அமைச்சர் ஜெயகுமார்

அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் ஆகியோருடன் செவ்வாய்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மிகவும் எழுச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்று வருகிறது. அதனை தமிழகம் முழுவதும் இதேபோன்று நடத்துவது குறித்து விவாதித்தோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அந்த கருத்துடன்தான் யாரையும் விடாமல், எல்லோரும் தேவை என்ற மனநிலையுடன் நாங்கள் உள்ளோம். 

அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தைக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. ஒபிஎஸ் குழு கலைக்கப்பட்டாலும் இணைப்பு கதவுகள் மூடப்படவில்லை. நிச்சயம் இதற்கு முடிவு கிடைக்கும். அதிமுக என்றுமே ஒரு எஃகுக் கோட்டை. மற்றவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 

டிடிவி தினகரன் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுடன் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது. இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கத்துடன் செயல்படுகிறோம். கட்சியையும் ஆட்சியையும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புடன் வழிநடத்தி வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com