வேகக் கட்டுப்பாடு இருக்கும் போது, அதிவேக வாகனங்கள் உற்பத்தி செய்வது ஏன்? நீதிமன்றம் நெத்தியடி

இந்திய சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்தான் பயணிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது மணிக்கு 100 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்கும் மோட்டார் வாகனங்கள் தயாரிக்கப்படுவது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேகக் கட்டுப்பாடு இருக்கும் போது, அதிவேக வாகனங்கள் உற்பத்தி செய்வது ஏன்? நீதிமன்றம் நெத்தியடி


சென்னை: இந்திய சாலைகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்தான் பயணிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது மணிக்கு 100 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்கும் மோட்டார் வாகனங்கள் தயாரிக்கப்படுவது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து 1989ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையை சுட்டிக் காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு, இதுபோன்ற அதிவேக திறன் கொண்ட வாகன உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேக திறன் கொண்ட எஞ்ஜின்கள் தயாரிப்பதை மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தடை செய்துவிட்டால், வேகமாக செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமே எழாதே. வாகன ஓட்டுநரே, அதிக வேகமாக செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் கூட அவரால் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நீதிபதி, இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அதி வேக திறன் கொண்ட வாகனங்கள் எப்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றும், பல அப்பாவி உயிர்களை பலிவாங்கும் இதுபோன்ற வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி
சாலையில் அதிவேகமாக சென்ற இரு பேருந்துகள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். சுமார் 29 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், இந்த இரு பேருந்துகள் ஓட்டுநர்கள், அதி வேகமாக வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதில், விலை மதிக்க முடியாத 2 மனித உயிர்கள் பலியாகியுள்ளன.

மத்திய மோட்டார் வாகனச் சட்டம் -1988, பிரிவு 112 - இல் வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. அதில், கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு வேகம் நிர்ணயிக்கப்படவில்லை.

மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 50 கி.மீ., வேகத்திலும், பயணிகள் பயணம் செய்யும் வாகனங்களும் (பேருந்து), சரக்கு வாகனங்களும் (லாரி) அதிகபட்சம் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டப்படி பேருந்து, லாரிகள் மணிக்கு அதிகபட்சம் 65 கி.மீ., வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்றிருக்கும்போது, இந்த வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதிவேகமாக செல்லக்கூடிய வாகனங்களை எப்படி தயாரிக்கின்றன?

அதுவும் மணிக்கு 100 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லக்கூடிய வாகனங்களை எப்படி தயாரிக்கின்றன? இந்த தொழிற்சாலைகள், அதிவேக என்ஜின்களை கொண்ட வாகனங்களை தயாரிக்கவில்லை என்றால், வேகமாக சென்றதால் விபத்து நடந்தது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

எனவே, வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவை உற்பத்தி செய்யப்பட வேண்டும். எனவே, இந்த நிபந்தனையை அமல்படுத்த முடியுமா என்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்.

மேலும், அதிவிரைவாக செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள்கள், கார்கள் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இந்த வாகனங்கள், பந்தயத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களை ஓட்டுபவருக்கு மட்டுமல்ல, சாலையிலும், நடைபாதைகளிலும் செல்வோரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

எனவே, மத்திய நிதித் துறை செயலாளரை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக இணைக்கிறேன்.

அவர் அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள வெளிநாட்டு மோட்டார் சைக்கிள்கள், கார்கள் எந்த நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

எச்சரிக்கை: மேலும், ஒவ்வொரு வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜூலை 8 -ஆம் தேதி மற்றும் ஆகஸ்டு 19 -ஆம் தேதிகளில் இந்த நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் வரும் 21-ஆம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லையெனில், தமிழக போக்குவரத்துச் செயலாளர், மத்திய நிதித்துறை செயலாளர் ஆகியோர் மறு நாள், அதாவது வரும் 22 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com