'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
இது தொடர்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரத்தில் ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினர் வி.ஏழுமலை பேசியதாவது:
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கபட்டது. அதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை.
எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக 'நீட்' தேர்வு உள்ளது. தமிழக மாணவர்களில் 98 சதவீதம் பேர் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்துள்ளனர். 'நீட்' தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இத்தேர்வை எழுத தமிழக மாணவர்களை வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. மேலும், தமிழக மசோதா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்அவர்.
இதே விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பரசுராமன் முன்வைத்த கோரிக்கையில், 'நீட்' தேர்வு முறை தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பாக உள்ளது. இதனால், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தமிழக மாணவர்களின் நலன் கருதி 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க விரைவில் சட்டம் கொண்டு வர பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com