பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

தமிழகத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் (முதல்வர் எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி) இணைவதற்கான சூழ்நிலைகள் இதுவரை ஏற்படவில்லை.
பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

தமிழகத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளும் (முதல்வர் எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி) இணைவதற்கான சூழ்நிலைகள் இதுவரை ஏற்படவில்லை.
இருதரப்பினரும் தங்கள் தரப்பு கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதாலும், அணிகளுக்குள் இருக்கும் நிர்வாகிகளிடம் பல்வேறு முரண்கள் ஏற்பட்டுள்ளதாலும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) இணைவதற்கு 60 நாள்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குப் பின் கட்சிப் பணிகளை தான் தொடர இருப்பதாகவும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இரு அணிகளுக்கும் அவர் அளித்த காலக்கெடு வரும் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அதிமுக அணிகளுக்குள் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பரபரப்பு இருந்தாலும் இரு அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை பெரிய அளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை என்பதே அணிகளுக்குள் இருக்கும் நிர்வாகிகளின் கருத்தாகும்.
அதிமுக (அம்மா அணி): அதிமுக அம்மா அணியைப் பொருத்தவரை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்களின் கையே ஓங்கி இருக்கிறது. தமிழக அரசையும் அவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்தி வருகிறார்கள். அணிகள் இணையும் பட்சத்தில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலருக்கு அமைச்சர் பொறுப்பு உள்பட கட்சியிலும், ஆட்சியிலும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அவர்களுக்கு அளிக்கும் பிரதிநிதித்துவம், தங்களது முக்கியத்துவத்தைக் குறைத்து விடும் என்ற கருத்து அதிமுக அம்மா அணியின் சில அமைச்சர்களிடம் இருக்கிறது. இதனால், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இதுவரை இருக்கிறது. தமிழக அரசை 122 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவைக் கொண்டே நடத்தி விடலாம் என்ற எண்ணத்துக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.
தேர்தல், இரட்டை இலை, இணைப்பு, பேச்சுவார்த்தை போன்ற விஷயங்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே அதிமுக அம்மா அணியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் சில நிர்வாகிகள் இருக்கின்றனர். இதனால், அணிகள் இணைப்புக்கு இப்போது என்ன அவசியம் என்பதே அம்மா அணியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி: அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நிர்வாகிகளில் எம்.எல்.ஏ.-க்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. முன்னாள் அமைச்சர்கள்தான் அணியின் முக்கிய நிர்வாகிகளாகவும் இருக்கின்றனர்.
அம்மா அணியுடன் இணைவதால் தங்களுக்கு அரசியல் ரீதியாக என்ன லாபம் இருக்கும் என்பதே அந்த முன்னாள் அமைச்சர்களின் எண்ண ஓட்டமாகும்.
இது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், அதிமுக அம்மா அணியுடன் நாங்கள் இணைய வேண்டுமானால் அவர்கள் சசிகலா, தினகரனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து முற்றாக நீக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை அம்மா அணி நிறைவேற்றினால் இணைப்புக்கான பேச்சுவார்த்தை சாத்தியம்.
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதிமுக அம்மா அணியினர் சசிகலாவின் கருத்துகளை ஏற்றே செயல்படுவதாக நாங்கள் சந்தேகம் கொள்கிறோம். இதனாலேயே அந்த அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயக்கம் காட்டுகிறோம் என்றார்.
அதேசமயம், ஓ.பி.எஸ். அணியில் எம்.எல்.ஏ.-க்களாக இருக்கும் ஒருசிலர் எப்படியாவது அம்மா அணியுடன் இணைந்து ஆளும் கட்சி வரிசையில் இடம்பெற வேண்டும் என்ற மன ஓட்டத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏ.-க்களாக இல்லாதவர்கள், மத்தியில் பாஜகவுடன் இணைந்து அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பெறுவது எப்படி என்ற யோசனையையும் முன்வைக்கிறார்கள்.
இப்படி இழுபறி நிலையில் இருப்பதைவிட பாஜகவில் இணைந்துவிடலாம் என்றும், அந்தக் கட்சியில் முக்கியமான பொறுப்புகளைப் பெறலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால், அதிமுக தங்களால் இயக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதும், அதைப் பயன்படுத்தி வருங்காலத்தில் அதிமுகவைக் கைப்பற்றலாம் என்பதும் அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
பாஜகவில் இணைந்தால், ஓ. பன்னீர்செல்வத்துக்கு மாநிலத் தலைவர் பதவியைத் தருவதற்கு பாஜக தலைமை தயாராக இருப்பதாக ஒரு வதந்தி நிலவுகிறது.
இது குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் பிரதமர் பேசியிருப்பதாகவும் ஓ.பி.எஸ். அணியில் உள்ள ஒருவர் தெரிவிக்கிறார்.
டிடிவி புயல்: பல்வேறு முரண்களைக் கொண்ட இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டதால்தான் டிடிவி தினகரன் அவகாசத்தை அளித்துள்ளதாக அவர்களது அணியினர் கூறுகின்றனர்.
வரும் 4-ஆம் தேதிக்குப் பிறகு, கட்சித் தலைமை அலுவலகம் சென்று பிரச்னையை ஏற்படுவதற்குப் பதிலாக தனது சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்து தொண்டர்களைச் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பை அவர் அன்றைய தினமே (ஆக.4) வெளியிட உள்ளார்.
இதனால், இப்போதைக்கு அதிமுக அணிகளில் எந்த பெரிய மாற்றங்களும் இல்லாமல் இப்போதைய நிலையே தொடரும் என்றுதான் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com