அப்துல் கலாம் நினைவகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்படுமா?

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அப்துல் கலாம் நினைவகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்படுமா?

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அப்துல் கலாம் தேசிய நினைவகமானது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ரூ.15 கோடி செலவில் ராமேசுவரம் பேக்கரும்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதை கடந்த மாதம் 27-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அன்று முதல் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து நினைவகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

நினைவகத்தில், அவரது சமாதி அருகே தங்க நிறத்தினாலான நாகஸ்வரம், மிருதங்கம், வீணை, கித்தார் உள்ளிட்ட இசைக் கருவிகள், கலாம் பயன்படுத்திய பொருள்கள், உடைகள், காலணிகள் ஆகியன கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன. கலாம் உலகத் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கலாமின் கல்விச் சான்றிதழ்கள் ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நினைவகத்தின் பிரதான நுழைவு வாயில் பூட்டியபடியே இருக்கிறது. மற்றொரு வாயில் வழியாகவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நினைவகத்துக்குள் செல்லிடப்பேசி, கேமரா போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலுக்கு முன்பே காலணிகளை கழற்றிவிட்டு வெறுங்காலுடன்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், வெயில் நேரத்தில் செல்லும் பார்வையாளர்கள் மொசைக் தரையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். முதியோர்கள், குழந்தைகள் என பலரும் வெயிலின் தாக்கம் தாங்காமல் ஓடிச் செல்வது பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

நுழைவு வாயில் பகுதியில் குவிந்து கிடக்கும் காலணிகள் முகம் சுளிக்க வைக்கிறது. மாலை 5 மணி வரை மட்டுமே நினைவகம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரியாமல் மாலை 5 மணிக்கு மேல் வரும் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். கேமராக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், நினைவகத்தின் உள்ளே இருக்கும் கலாமின் சிலைகள், ஒவியங்கள்ஆகியனவற்றின் முன்பாக நின்று புகைப்படம், விடியோ மற்றும் கைப்படம் எடுக்க முடிவதில்லை. இது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நினைவகத்துக்கு வந்திருந்த தஞ்சாவூரை சேர்ந்த சபரி தயாமதி என்பவர் கூறியது: ராமேசுவரம் கோயிலில் தரிசனத்தை முடித்து தனுஷ்கோடி சென்று விட்டு மாலையில் நினைவகத்தை பார்வையிட வந்தோம். ஆனால் மாலை 5 மணிக்கே நினைவகம் பூட்டப்பட்டு விட்டதால் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறோம். இதனை இரவு 7 மணி வரையாவது திறந்து வைக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக நினைவகப் பொறுப்பாளர் ஒருவர் கூறியது:
 உள்ளே கலாமின் சமாதி இருப்பதால் காலணிகள் அணிந்து செல்ல யாருக்கும் அனுமதியில்லை. பிரதான நுழைவு வாயிலின் பின்புறத்தில் சில பணிகள் நடைபெற்று வருவதால் அதை திறக்கவில்லை. பிரதான வாயிலில் இருந்து நினைவகம் வரை சுமார் 1600 அடி தூரம் உள்ளது. அதில் நடந்து செல்ல வெயிலில் பார்வையாளர்கள் சிரமப்படுவதால் சிவப்புக் கம்பளம் விரிக்க உள்ளோம். தமிழகத்தில் அவ்வளவு நீளத்தில் கம்பளம் கிடைக்கவில்லை. அதைத் தயாரிக்கும் பணி கேரளத்தில் நடந்து வருகிறது. ஒரு வாரத்துக்குள் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுவிடும். கைப்படம், விடியோ பதிவு மோகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நினைவகத்தில் இருந்த 4 புகைப்படங்களை உடைத்து விட்டனர். எனவே புகைப்படம், கைப்படம், விடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

நினைவகத்தை பார்க்க வரும் எவரும், அதை புகைப்படமாகவோ, விடியோவாகவோ பதிவு செய்து ஆவணப்படுத்த நினைப்பது தவிர்க்க முடியாதது. எனவே இங்குள்ள பொருள்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து புகைப்படம், விடியோ எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com