இணைப்புக் குறித்து அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தை

அதிமுக இரண்டு அணிகளின் இணைப்புக் குறித்து அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
இணைப்புக் குறித்து அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தை

அதிமுக இரண்டு அணிகளின் இணைப்புக் குறித்து அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார்.
மதுரையில் தொடங்கிய நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அவ்விழாக்களைச் சிறப்பாக நடத்தவே ஆலோசனை நடத்தப்பட்டது. அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
எங்களைப் பொருத்தவரை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நினைக்கிறோம். யாரையும் விட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுதான் கலைக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பில் அமைக்கப்பட்ட குழு அப்படியேதான் இருக்கிறது.
இரு அணிகளை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை அனைத்து நிலைகளிலும் நடந்து வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களைப் பொருத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாகச் செயல்படுகிறோம். ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகே தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன. மத்திய நிதி அமைச்சர் இங்கு வந்த போது தமிழகத்துக்குத் தேவையான ரூ.17 ஆயிரத்து 74 கோடிக்கு திட்ட அறிக்கையை அளித்தோம்.
அதைப் பெற்று தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மத்திய அரசோடு கூட்டணி வைப்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களைப் பொருத்தவரை கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் வழிநடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com