லட்சுமிபுரம் கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் நிலத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ரத்து செய்யக்கோரும் மனு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின்
லட்சுமிபுரம் கிணறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் நிலத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை ரத்து செய்யக்கோரும் மனு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஏ.ரங்கசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்:   தேனி மாவட்டம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இங்கு கிணறு தோண்டி அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த நிலத்திற்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்வாரிய விதிகளின்படி ஆற்றின் கரையோரம் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள விளை நிலங்களுக்கு தான் விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலம் ஆற்றின் கரையில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இருப்பினும் அதற்கு விவசாய பயன்பாட்டிற்கான மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று  மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியர் தரப்பில், கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரை வாகனங்களில் எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.  இதைப் பதிவு செய்த நீதிபதிகள்,  நிலத்தின் உரிமையாளரான விஜயலட்சுமி இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com