சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை பரிசீலனையிலிருந்து நீக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான

சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை பரிசீலனையிலிருந்து புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தற்பொழுது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது புதன்கிழமை விசாரணை நடைபெறும் என வழக்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. முன்னதாக, இந்த வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகிய இருவரும் தீர்ப்பளித்திருந்தனர். ஆனால், தற்பொழுது பினாகி சந்திர கோஷ் ஓய்வு பெற்று விட்டதால், நீதிபதிகள் ஃபாலி ரோஹிங்டன் நாரிமன், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நீதிபதிகள் அறையில் பிற்பகல் 1.35 மணிக்கு விசாரணை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், நீதிபதி அமிதவா ராய் இடம் பெற்ற நீதிபதிகள் அமர்விடம் சசிகலா சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி செவ்வாய்க்கிழமை மாலை முறையிட்டார். அப்போது, 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதி ஃபாலி ரோஹிங்டன் நாரிமனின் தந்தையும், மூத்த வழக்குரைஞருமான ஃபாலி நாரிமன் ஜெயலலிதாவுக்காக வாதாடியுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஃபாலி ரோஹிங்டன் நாரிமன் விடுவித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் புதன்கிழமை வழக்குகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், காலை 11 மணி அளவில் இந்த வழக்கு, பட்டியலிலிருந்து திடீரென நீக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஃபாலி ரோஹிங்டன் நாரிமன் விலகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com