பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத் துறை பேருந்துகளில் வைஃபை வசதி அறிமுகம்

பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படும் நவீன பேருந்துகளில் படிப்படியாக வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள்
பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாத் துறை பேருந்துகளில் வைஃபை வசதி அறிமுகம்

பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படும் நவீன பேருந்துகளில் படிப்படியாக வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாயை அதிகரிக்க...: தமிழகத்தில் மலை வாசஸ்தலங்கள், அழகிய கடற்கரை தலங்கள், திருக்கோயில்கள், வனவிலங்குகள் சரணலாயங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த தலங்களை சுற்றிப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதுபோன்ற இடங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். தற்போது, இச்சுற்றுலா செல்வதற்கு முன்பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட அளவில் வருவாயும் கிடைத்து வருகிறது. அதேபோல், கடந்த ஆண்டு மட்டும் ரூ.10.07 கோடி வரையில் வருவாய் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தங்கும் இடங்களில் இலவச ஆன்லைன் வசதி செய்து தருதல் உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கவும் சுற்றுலாத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
13 வகையான சுற்றுலா: எனவே, சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் திருப்பதி சுற்றுலா, திருவண்ணாமலை கிரிவலம், மாமல்லபுரத்துக்கு ஒருநாள் சுற்றுலா, 3 நாள்கள் கொண்ட குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் சுற்றுலா, 3 நாள்கள் கொண்ட நவக்கிரக திருக்கோயில்கள் வழிபாடு சுற்றுலா, 4 நாள்கள் கொண்ட முருகனின் அறுபடை வீடுகள் சுற்றுலா, 5 நாள்கள் கொண்ட 108 அம்மன் திருக்கோயில் சுற்றுலா என 13 வகையான சுற்றுலாக்களுக்கு தங்கும் வசதியுடன் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்காகவே, இத்துறை சார்பில் இயக்கப்படும் 13 பேருந்துகளில், குளிர்சாதன வசதிகள் கொண்ட 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், அனைத்து வசதியுடன் கூடிய தலா ரூ. 1 கோடி மதிப்பிலான 2 வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் கூடுதலாக வைஃபை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என நீண்ட நாள்களாக சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வைஃபை வசதி அறிமுகம்: இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது பயணிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சுற்றுலா இடங்கள் குறித்து பயணிகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆவணப் படங்களும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அனைத்து சுற்றுலா பேருந்துகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com