பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்

அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 2 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 2 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தி முடித்த பிறகுதான் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், மருத்துவக் கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பதை இதுவரை கணிக்க முடியவில்லை. இதனால் பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதுதான் தற்போது பலரின் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் சிக்கலாக மாறியுள்ளது.
தற்போது குறைந்தபட்ச கல்வி வாய்ப்பை உறுதி செய்ய பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடந்தாலும், அதில் சேரும் மாணவர்களில் 99 சதவீதத்தினர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்கெனவே சேர்ந்தவர்களாகத் தான் இருப்பர். அதனால் மருத்துவக் கலந்தாய்வு நிறைவடையும்போது, முன்னணி பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரம் இடங்களும், கால்நடை மற்றும் வேளாண்மைப் படிப்புகளில் 1,000 இடங்களும் காலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் எவரேனும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அதனால் ஏற்படும் காலியிடங்கள் நிரப்பப்படாது,அவை காலியாகவே இருக்கும் என்று பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்துள்ளார். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் இந்த முடிவால் அண்ணா பல்கலைக்கழகத்திலும், பிற அரசு பொறியியல் கல்லூரிகளிலும் 1,800 இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகும்.
வேளாண்மை கல்லூரிகளில் முதற்கட்ட கலந்தாய்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் பலர் சேர்ந்துள்ளனர். ஆனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்குபோது, அதிக மதிப்பெண் எடுத்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள்அதில் பங்கேற்க முடியாது. மாறாக அவர்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்து, இதுவரை எந்த கல்லூரியிலும் சேராதவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக படிப்பார்கள். இது எந்த வகையான சமூக நீதி?
எனவே, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் காலியிடங்களை அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் அரசு கல்லூரிகளில் ஓரிடம் கூட வீணாகாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com