மெரீனா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை நள்ளிரவில் அகற்றம்: ராமதாஸ், இளங்கோவன் கண்டனம்

கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ்
மெரீனா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை நள்ளிரவில் அகற்றம்: ராமதாஸ், இளங்கோவன் கண்டனம்

கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: கம்பீரமாக நின்ற சிவாஜி சிலை அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக தவறான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அதிமுக அரசு. அந்தச் சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரை சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராஜர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கு ஜூலை 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியுள்ளது. எனவே புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி மற்றும் காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: கடற்கரையில் இருந்து சிவாஜி கணேசனின் சிலையை அவரது மணிமண்டபத்தில் ஒதுக்குப்புறமாக வைப்பது கெளரவமாக இருக்காது. சத்தியமூர்த்திபவனில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அவரது படத்தை வைத்து கொண்டாடிய தலைமைக்கு கடற்கரை சாலையில் உள்ள தலைவர்களின் சிலையோடு சிவாஜி சிலையையும் வைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. எம்ஜிஆருக்கு காட்டிய ஆர்வத்தை, காங்கிரஸை வளர்த்த சிவாஜிக்கு காட்டாததை நினைத்து காங்கிரஸ் தொண்டன் வருத்தப்படுவான்.

இனி ஒரு சிலை செய்வோம்
 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இனி ஒரு சிலை செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 'சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை புதன்கிழமை நள்ளிரவு அகற்றப்பட்டது. ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு இனி ஒரு சிலை செய்வோம்;அதை எந்த நாளிலும் காப்போம். அவர் அரசுக்கும் அப்பால் என் அப்பா' என்று அதில் கமல் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com