கூடங்குளம் 2ஆவது உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணிகளுக்காக வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்திய-ரஷிய ஒப்பந்தப்படி கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எரிபொருள் நிரப்பப்பட்டு 22.10.2013 ஆம் தேதி முதல் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 31.12.2014-ஆம் தேதி முதல் நள்ளிரவு 12.01 மணிக்கு வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. மேலும், தொடர்ச்சியாக உற்பத்தியை அதிகரிக்கச் செய்து முழு கொள்ளளவும் எட்டப்பட்டது. மின் உற்பத்தி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 14,126 மில்லியன் யூனிட் மின்சாரம் (1,412.6 கோடி யூனிட்) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள்களை நீக்கிவிட்டு புதிய எரிபொருள்கள் நிரப்பும் பணிக்காக முதலாவது உலையில் கடந்த ஏப்ர்ல 13ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது அணு உலையிலும் கடந்த மே 5ஆம் தேதி நள்ளிரவு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அணு உலையில் 950 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு வந்த நிலையில், டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாகவும், பராமரிப்பு பணிகளை தொடங்குவதற்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பணிகளை முடிக்க இரண்டு வாரங்களுக்கு மேலானது. பணிகள் அனைத்தும் முடிந்து கடந்த மே 20ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இரண்டு மாதங்களுக்கு மேல் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக. 4) காலை 10.35 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலையில் இயக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஜெனரேட்டரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க நேரிட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த பிறகு, ஆக.15ஆம் தேதிக்கு மேல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com